தண்ணீர், மின்விளக்கு என எந்த வசதியும் இல்லை மயானத்திலும் பிரச்னை மேல் பிரச்னை

* திருச்சுழியில் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்

திருச்சுழி : திருச்சுழி மயானத்தில் தண்ணீர், மின்விளக்கு என எந்த வசதியும் இல்லாததால் இறுதிச்சடங்கு செய்ய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திருச்சுழியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊருக்கு வடக்கு பகுதியில் ஆற்றின் கரையோரம் மயானம் உள்ளது. இந்த மயானம் அனைவருக்கும் பொதுவானதாகும்.

மயானத்தில் தண்ணீர் வசதி, மின் விளக்கு வசதியின்றி கருவேலம் மண்டி காணப்படுகிறது. மேலும் மயானத்திற்கு செல்லும் பகுதியில் மின் வயர் தாழ்வாக செல்கிறது. இதனால் பிரேதத்தை இறக்கி கொண்டு செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஊருக்குள் யாராவது மரணமடைந்தால் பிரேதத்துடன் குடத்தில் தண்ணீரும் கொண்டு வரும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மரணமடைந்தால் தீப்பந்தத்தோடு பிரேதத்தை அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது சம்மந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து பழனிக்குமார் கூறுகையில், ‘‘திருச்சுழியில் உள்ள சுடுகாடு அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானதாகும். இவ்வூரில் குடிநீர் தேவைக்காக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல் அமைத்து நான்கு மேல்நிலைத்தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் திருச்சுழியில் உள்ள மயானத்தில் மின்சார விளக்கு, தண்ணீர் வசதியோ முற்றிலும் இல்லை.

இதனால் வெளியூர்களிலிருந்து வருகின்ற உறவினர்கள் துக்க நிகழ்ச்சியை அனுசரித்துவிட்டு குளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மின்கம்பிகள் செல்கின்றன. முன்பு குண்டாற்றில் தண்ணீர் சென்றதால் அதிலிருந்து நீர் எடுத்து சம்பிரதாயங்கள் செய்து வந்தோம். தற்போது நீர்வரத்தின்றி உள்ளதால் பிரேதம் வரும்போது நீரோடு வரவேண்டியுள்ளது. எனவே மயானத்திற்கு தேவையான வசதிகள் செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: