தங்கம் விலையில் திடீர் மாற்றம் : ஒரே நாளில் சவரன் ரூ.136 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.136 குறைந்தது. வரும் நாட்களில் தங்கம் விலை உயரத் தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறினர்.தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து உயர்ந்து வந்தது. அது இந்த மாதத்திலும் நீடித்தது. கடந்த 20ம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.3,226க்கும், சவரன் ரூ.25,808க்கும் விற்கப்பட்டது. சவரன் ரூ.25,808 என்பது தங்கம் விலை வரலாற்றில் இது தான் முதல்முறையாகும். இந்த அளவுக்கு தங்கத்தின் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன்தினம் திடீரென தங்கம் விலை சரிந்தது. அதாவது, கிராம் ரூ.3206க்கும், சவரன் ரூ.25,648க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.3,189க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.25,512க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால்  கூறுகையில், ‘தங்கம் விலை தற்போது இறங்கியுள்ளது. இது மேலும் ஏறத்தான் வாய்ப்புள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பின்னடைவு உள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை கூடியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, தங்கத்தின் விலை உயர்ந்து வந்திருக்கிறது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இதனால், இந்த மாதம் முழுவதும் ஏற்றம், இறக்க நிலை காணப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: