வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, அரசு அளித்த வட்டி  தள்ளுபடி சலுகை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:வட்டி சுமையின் காரணமாக, விற்பனை பத்திரம் பெறாமல் இருந்த, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டி முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து, அரசு கடந்த 15.6.2017 அன்று ஆணையிட்டது. அரசின் இந்த சலுகையை ஒரு வருட காலத்திற்கு அதாவது 26.8.2018 வரை நடைமுறைப்படுத்த  நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சலுகை மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன்மூலம் பல்வேறு திட்டங்களில் ஒதுக்கீடுதாரர்கள் வட்டி தள்ளுபடி நீங்கலாக, முழு தொகையையும் செலுத்தி, விற்பனை பத்திரம் பெற்று பயனடைந்து வருகின்றனர். இச்சலுகை இந்த மாதம் 26ம் தேதியுடன் முடிய உள்ளதால், இந்த சலுகை 31.3.2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட கோட்டம், பிரிவு அலுவலகங்களை அணுகி, வட்டி தள்ளுபடி நீங்கலாக, நிலுவை தொகையை உடன் செலுத்தி, விற்பனை பத்திரம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: