உலக நாடுகள் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு தலைமை அலுவலகம் முடக்கம்: பாகிஸ்தான் நடவடிக்கை

லாகூர்: பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் முடக்கப்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிக உகந்த நாடு என்று பாகிஸ்தானுக்கு அளித்த சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா உடனடியாக திரும்ப பெற்றது. நேற்று முன்தினம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனா உள்ளிட்ட 15 உறுப்பினர் நாடுகளும் ஒருமனதாக புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கண்டிக்கத்தக்க இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தன.

உலக நாடுகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, “பஞ்சாப் மாநில அரசு, பகாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தை முடக்கி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மதரேசத்தூல் சபீர், ஜமா-இ-மஸ்ஜித் சுபானல்லா ஆகியவற்றையும் முடக்கியது. அதனை கண்காணிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களின் தலைமை முகாமில் 70 ஆசிரியர்கள், 600 மாணவர்கள் உள்ளே இருந்தனர். பஞ்சாப்  போலீசார் அவர்கள் முகாமை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: