×

முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை இளைஞர் காங். தலைவரிடம் நஷ்டத்தை வசூலிக்க கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்,: ‘காசர்கோட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து கேரளாவில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை இளைஞர் காங்கிரஸ் தலைவரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்’ என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, முழு அடைப்பு போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடகோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டனஇதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்காமல் முழு அடைப்பு போராட்டம் நடத்தக் கூடாது. போராட்டத்தின்போது ஏற்படும் நஷ்டத்தை அந்தந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி காசர்கோட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கிரிபேஸ், சரத்லால் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மறுநாள் காங்கிரஸ் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்தின் போது கேரளா முழுவதும் வன்முறை வெடித்தது. பல அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. போராட்டத்தின் போது ஏற்பட்ட நஷ்டம், பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ₹1.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், முழு அடைப்பு போராட்டத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் டீன் குரியா கோசிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டது. மேலும், காசர்கோட்டில் நடந்த வன்முறைக்கான நஷ்டத்தை காசர்கோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கமருதீன் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது. இதுதவிர 189 வழக்குகளிலும் டீன் குரியா கோசை குற்றவாளியாக சேர்க்கவும் உத்தரவிட்டது.

முன்னாள் டிஜிபி மீது வழக்கு
சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த முழு அடைப்பு குறித்த அறிக்கையும் அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ‘கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ₹3 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. ₹38.52 லட்சம் பொதுசொத்துக்களுக்கும் ேசதம் ஏற்பட்டுள்ளது. 150 போலீசார் உள்பட 291 பேர் காயமடைந்தனர். மேலும், சபரிமலை விவகாரத்தில் 990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவித்திருந்தது. இதனையும் நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், 990 வழக்குகளிலும் முன்னாள் டிஜிபி சென்குமார் மற்றும் பாஜ நிர்வாகிகளை குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும். மொத்த நஷ்டம் மற்றும் இழப்புகளை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. முன்னாள் டிஜிபி சென்குமார், பாஜ தலைவர்களுடன் சேர்ந்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Violence Youth Cong ,Kerala High Court , Kerala HC, complete shutdown, loss
× RELATED நடிகை பலாத்கார வழக்கு நடிகர்...