புல்வாமா தாக்குதலின்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘புல்வாமா தாக்குதல் நடந்த 2 மணி நேரத்துக்கு பின்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்குங்கள்’ என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.கா‌ஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்த 2 மணி நேரத்துக்கு பிறகு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கான விளம்பர படமொன்றின் புகைப்பட படப்பிடிப்பில் இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று அளித்த பேட்டியில், “புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வின் போது, பிரதமர் மோடி அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல், கார்ப்பெட் தேசிய பூங்காவில், பாஜ.வின் தேர்தல் பிரசார விளம்பர படமொன்றின் புகைப்பட சூட்டிங்கில் இருந்தார். உத்தரகாண்டில் நடந்த பொதுகூட்டத்தில், மாலை 5.10 மணியளவில் தொலைபேசி மூலம்  பிரதமர் உரையாற்றியதாக தூர்தர்ஷனில் செய்தி  ஒளிபரப்பானது. அப்படியென்றால் தாக்குதல் நடந்த பின்னர், மாலை 3.10 மணி முதல் 5.10 மணி வரை, அந்த 2 மணி நேரம், பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதை மக்களுக்கு கூற வேண்டும். உத்தரகாண்ட் கூட்டத்தில் ஆற்றிய உரையிலும் புல்வாமா தாக்குதல் பற்றி ஒன்றும் பேசவில்லை. அப்படியானால், துணை ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் ஒன்றுமே அறிந்திருக்கவில்லையா? இல்லை, உணர்ச்சியற்று இருந்தாரா? அல்லது தாக்குதல் பற்றி அறிந்தும் ஆர்வமற்றவராக காட்டி கொண்டாரா?” என கேள்வி எழுப்பினார்.

காங். தலைவர் ராகுல் டிவிட் பிரைம் மினிஸ்டர் அல்ல; பிரைம் டைம் மினிஸ்டர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தாக்குதல் சம்பவத்தை அறிந்த வீரர்களின் குடும்பங்களும், ஒட்டு மொத்த நாடும் வலியில் கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தது. அந்த தண்ணீரில் இருந்து கொண்டு பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி அறிந்த 3 மணி நேரத்துக்கு பிறகும் நமது ‘பிரைம் டைம் மினிஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்தார்’ என்று கூறியுள்ளார். பிரதமரை ஆங்கிலத்தில் ‘பிரைம் மினிஸ்டர்’ என்று அழைப்பார்கள். அதைதான், ‘பிரைம் டைம் மினிஸ்டர்’ என்று ராகுல் விமர்சித்துள்ளார்.

காலையில் எடுத்த போட்டோ;

புல்வாமா தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், பிரதமர் மோடி தேர்தல் பிரசார விளம்பரத்தில் நடித்து கொண்டிருந்ததாகவும், ரம்மியமான மலைப்பகுதியில் படகு சவாரி சென்றதாகவும் குற்றம்சாட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட புகைப்படங்கள் இன்றைய தினம் காலையில் எடுக்கப்பட்டது என்று பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் டிவிட்டரில், ‘ராகுல் ஜி, உங்களின் போலி செய்திகளால் களைப்படைந்து விட்டோம். காலையில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு தேசத்தை தவறாக வழி நடத்த வேண்டாம். தாக்குதல் குறித்து உங்களுக்கு வேண்டுமானால் முன்னரே தெரிந்திருக்கலாம். ஆனால், நாட்டிற்கு அன்று மாலையில்தான் தெரிய வந்தது. அடுத்தமுறை இதை விட சற்று சிறப்பான முயற்சி எடுங்கள். அதிலாவது வீரர்களின் உயிர் தியாகத்தை குறிப்பிடாமல் இருங்கள்’ என்று பதிவிடப்பட்டு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: