×

5 மண்டலங்களில் உள்ள கிராம சாலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்

மதுரை:  நெல்லை, கேடிசி நகரை சேர்ந்த கணேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மோசமான சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.  தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நாகர்கோவில் என 5 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் சாலையின் ஒட்டுப்பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடியும், சீரற்ற பகுதிகளில் சாலை அமைக்க ரூ.268 கோடியும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் முறையாக சாலைகளை ஆய்வு செய்து, சாலை ஒட்டுப்பணிகளுக்கும், புதிதாக சாலை அமைப்பதற்கும் எவ்வளவு தேவைப்படும் என நேரில் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல், பொறுப்பற்று ஏனோதானோ என திட்ட மதிப்பீடு செய்துள்ளனர்.இது தொடர்பாக நடவடிக்கை கோரியும் பயனில்லை. ஆகவே என் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், 5 மண்டலங்களிலும் சாலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக நாராயணகுமாரை நியமித்து, ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lawyer Commissioner ,village ,zones ,roads , Rural Road, Inspection, Appointment of Lawyer Commissioner
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி