×

மதுரை ஏர்போர்ட்டில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும் 2 முறை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  பெங்களுரிலிருந்து தனி விமானம் மூலம் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நேற்று காலை 11.30 மணிக்கு மதுரை வந்தார். பின்னர் தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 18 தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் ராமநாதபுரம் செல்ல பகல் 12.30 மணியளவில் விமான நிலையம் வந்தார். அப்போது, விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு காணொளி காட்சி மூலம் மத்திய விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி விமான நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பாஜ தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ், மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

 சுமார் அரை மணிநேர ஆலோசனைக்குப்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் பகல் 1.30 மணிக்கு அமித்ஷா ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து மாலை 3.15 மணிக்கு மதுரை திரும்பிய அமித்ஷா, விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் ஓபிஎஸ்சுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். மதுரை விமானநிலையத்தில் அமித்ஷாவை சந்திக்க மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோரும் நேற்று மதியம் வந்தனர். இருவரும், ஓபிஎஸ்சுடன் இணைந்தும், தனியாகவும்  10 நிமிடங்களும் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.பின்னர் அமித்ஷா கோவை கிளம்பி சென்றார். அமித்ஷா மதுரை வந்ததிலிருந்து, அவர் திரும்பிச் செல்லும் வரையில்  ஓபிஎஸ் 5 மணி நேரம் காத்திருந்து, அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

‘நமக்கு கிடைச்சது 5 தொகுதிதான்’
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி கூட்டம்  நடந்தது. இதில்தேசிய தலைவர் அமித்ஷா பேசுகையில், ``இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழகம் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜ கூட்டணிக்கு பிறகு நான் முதல் கூட்டத்தில் பங்கேற்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக நமக்கு 5 தொகுதிகள் மட்டும் ஒதுக்கி உள்ளது என்று எண்ணாமல், நாம் வெற்றி பெற்று மீண்டும் மோடியை பிரதமராக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ரகசிய சந்திப்பில் பேசியது என்ன?
அமித்ஷாவுடனான சந்திப்பின் போது பாஜவுக்கு 5 சீட் மட்டுமே கொடுக்கப்பட்டது ஏன் என ஓபிஎஸ் விளக்கியுள்ளார். மேலும், அதிமுக 40 எம்பி சீட்டுகள் தோற்றாலும் பரவாயில்லை. 21 எம்எல்ஏ சீட்டுகள்தான் முக்கியம் என்று வேலை செய்வதாக மத்திய உளவுத்துறை அமித்ஷாவுக்கு அறிக்கை கொடுத்திருந்தது. இது குறித்தும் அவர் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது. தன்னை சந்தித்த அதிமுக அமைச்சர்களிடம் இதுபற்றி நேரடியாக கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர், தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த தேர்தலை சாதாரணமாக எடுக்க வேண்டாம் என்று கூறிய அமித்ஷா, எம்பி தேர்தலில் பாஜ தோற்றாலும் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து, தமிழகத்தில் 40 சீட்டுகளில் தோற்றாலும் ஆபத்து என்பதை அவர் நேரடியாக விளக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நேரத்தில் சில ஒத்துழைப்புகளை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அமித்ஷா சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,OBS ,airports ,Amit Shah ,Madurai , Deputy Chief Minister O. Panneerselvam, Amit Shah, Madurai Airport
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்