×

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

திருவேங்கடம்: திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாயினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் அய்யாசாமி (42). இவர், கோவில்பட்டியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் நெல்லை மாவட்டம் குகன்பாறையில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்ற இந்த ஆலை, 2 ஏக்கர் 36 சென்டில் 7 அறைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் வெடிக்கும் வெடிகளைத்தான் தயாரிக்க வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக வான்வெடிகளான 240 ஷாட், 120 ஷாட் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.இந்த ஆலையில் நேற்று காலை 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு அறையில், வெடிமருந்து மூலப்பொருட்கள் கலந்து பக்குவப்படுத்தி (மணி மருந்து) வைத்திருந்தனர். இந்த அறையில், மதியம் 1.30 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள், வெளியே வந்து தப்பியோடினர். எனினும் வெயிலின் தாக்கம் காரணமாக வெடிமருந்துகள் தொடர்ந்து வெடித்தது. இதில் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. சுமார் 10 தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த தீக்காயமடைந்தனர். அங்கு பற்றி எரிந்த தீ, காற்றின் வேகத்தில் மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. அந்த அறைகளில் இருந்த வெடிகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால், 5 அறைகள் முழுவதுமாக தரைமட்டமானது.

இதைத்தொடர்ந்து, காற்றில் பரவிய தீப்பிழம்புகள், அப்பகுதியில் உள்ள மக்காச்ேசாள பயிர்களுக்கும் பரவியது. காற்றின் வேகம் பலமாக இருந்ததால், சுமார் 20 ஏக்கரில் பற்றி எரிந்தது. இதை மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, திருவேங்கடம் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 5 அறைகளில் இருந்த பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்ததால் அருகில் செல்ல முடியவில்லை.பின்னர், தீயை பெருமளவு கட்டுப்படுத்தி நீதிராஜ் (50), கிருஷ்ணம்மாள் (60), கஸ்தூரி (45) ஆகிய 3 ேபரின் உடல்களை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியம்மாள் (50) கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரியசாமி (40), கருப்பாயி (54), குருவம்மாள் (65), சின்னமாரியப்பன் மனைவி  சங்கரேஸ்வரி (47), வரகனூர்  சந்தனமாரி மனைவி கிருஷ்ணம்மாள் (55), சரவணன் (37) ஆகியோரை படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வெடிவிபத்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பிக்கள் அருண்சக்திகுமார் (நெல்லை),  ராஜராஜன் (விருதுநகர்) மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். ஆலை உரிமம் ரத்து:  கலெக்டர் ஷில்பா கூறுகையில், ‘‘பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்கள் துரிதமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆலையின் விதிமீறலால்தான் தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்தால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இந்த சம்பவம் குறித்து திருவேங்கடம் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய நிபுணர் குழு ஆய்வின்போது விபத்து
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில், பசுமை பட்டாசு குறித்து ஆய்வு நடத்தி பிப். 26க்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்பேரில், மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி), மத்திய தொழிற்சாலை அறிவியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்) நிபுணர்கள் நேற்று சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர். இந்தவேளையில், நெல்லை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 மணி நேரம் வெடிச்சத்தம்
பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சத்தம், சுற்றுவட்டாரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு கேட்டது. தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட போதும் இடிபாடுகளுக்கு இடையில் கிடந்த வெடிகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்தன. இதனால், 1.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை வெடி சத்தம் கேட்டவண்ணம் இருந்தன.

உரிமையாளர் தலைமறைவு
வெடி விபத்து நிகழ்ந்த ஆலையின் உரிமையாளர் அய்யாசாமி தலைமறைவாகி விட்டார். மேலும் குத்தகைக்கு எடுத்த 6 பேர் குறித்த விவரமும் உடனடியாக தெரிய வரவில்லை. அவர்களும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,cracker factory ,Kovilpatti , Fireworks plant, explosion accident
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா