தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு தர அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கும் காஷ்மீர் மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து உத்தரப் பிரதேசம் அரியானா உள்ளிட்ட பல்வேறு  மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.  மேலும், அவர்களை உடனடியாக தங்கள் மாநிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன.

இந்நிலையில், தாரிக் அபீப் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதிலும் உள்ள காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். இதை தடுத்து நிறுத்தி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சய் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதத்தில், “ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு வெளிமாநிலங்களில் வசித்து வரும் காஷ்மீர் மாணவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மத்திய அரசு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் அடுத்த 4 வாரத்தில் இந்த மனுவுக்கு பதிலளிக்க  நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’’ என தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: