மக்களவை தேர்தலில் ஆன்லைன் மூலம் வெளிநாட்டு இந்தியர் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம் என்ற பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. வரும் ஏப்ரல்-மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இத்தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என செய்தி பரவியது. இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கலாம் என்பது பொய்யான செய்தி.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்கள் சொந்த நாட்டில் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தால், அவர்கள் நேரடியாக தங்கள் தொகுதிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். அங்கு வெளிநாடு செல்லும்போது வழங்கப்பட்ட உண்மையான பாஸ்போர்ட்டை காட்டி தங்கள் வாக்கை பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் வாக்களிப்பது போல எந்த வசதியும் செய்யப்படவில்லை” என்றார். இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாம் என்ற பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்நிலையத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு துறை அமைச்சகத்தின் தகவலின்படி சுமார் 3.10 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள், ஆன்லைன் வாக்குபதிவு கிடையாது. ஆனால் அதிகாரம் பெற்ற பிரதிநிதி மூலமாக வாக்களிப்பதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: