×

இதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்

சென்னை: பாரத் பந்த், இதுதாண்டா போலீஸ், அருந்ததி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. ஐதராபாத்திலுள்ள கச்சிபௌலியில் வசித்து வந்தார் கோடி ராமகிருஷ்ணா. கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுநீரகங்கள் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமானது. சென்னையிலிருந்து டாக்டர்கள் அழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார். மேற்கு கோதாவரியிலுள்ள பாலகொல்லுவில் பிறந்தவர் கோடி ராமகிருஷ்ணா. பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு, 1982ல் ராமய்யா வீதில்லோ கிருஷ்ணய்யா படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். அனைத்துமே பெரிய வெற்றி பெற்றன. சிம்ஹாபுரி சிம்ஹம், குடாச்சாரி நம்பர் 1, மங்கம்மாகாரி மணவாடு, முவ்வ கோபாலுடு, சீனிவாச கல்யாணம், அங்குசம், பாரத் பந்த், சத்ரூ, அஞ்சி, அருந்ததி உள்பட 101 படங்களை அவர் இயக்கியுள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடத்திலும் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் சரத்குமார், சுகன்யா நடித்த கேப்டன் படத்தை இயக்கினார். இவர் இயக்கிய அங்குசம் தெலுங்கு படத்தில் டாக்டர் ராஜசேகர் நடித்திருந்தார். இந்த படம்தான் தமிழில் இதுதாண்டா போலீஸ் என்ற பெயரில் டப்பிங் ஆகி சூப்பர் ஹிட்டானது. அதேபோல் அனுஷ்கா நடிப்பில் இவர் இயக்கிய அருந்ததி படமும் தமிழில் பெரிய வெற்றியை பெற்றது.

கடைசியாக தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் திவ்யா ஸ்பந்தனா நடிப்பில் சிவநாகம் என்ற படத்தை 2016ல் இயக்கினார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள கோடி ராமகிருஷ்ணா, சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆரம்பத்தில் ஜனரஞ்சகமான படங்களை இயக்கி வந்த அவர், பின்னர் சமூக அவலங்களை தோலுரிக்கும் ஆக்‌ஷன் படங்களை இயக்கி புகழ் பெற்றார். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்பட பல ஹீரோக்களின் வெற்றிக்கு இவரது படங்களும் முக்கிய காரணமாக அமைந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodi Ramakrishna , This is the police, Arundhati films, Telugu cinema, director Kotakam Ramakrishna, death
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...