மத்திய நீர்வளத் துறை அறிவிப்பு: பாக். செல்லும் நதி நீரை தடுக்கப் போவது எப்படி?

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து  பாகிஸ்தானுக்கு பாயும் கிழக்கு நதிகளின் நீரை தடுத்து காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வியூகங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான்  இடையே 1960ம் ஆண்டு செய்து கொண்ட சிந்து நதி ஒப்பந்தப்படி, கிழக்கு  பகுதியில் பாயும் ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகளின் நீரை இந்தியாவும்,  மேற்குப் பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், சீனாப் ஆகிய 3 நதிகளின் நீரை  பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கிழக்கு நதிகளில் ஓடும்  தண்ணீரில் இந்தியா தனக்குரிய உரிமையை இதுவரை முழுமையாக பயன்படுத்தவில்லை.  இந்த 3 நதிகளின் தண்ணீரை இதுவரை பாகிஸ்தான் மட்டுமே பயன்படுத்தி வருகிறது.  இனிமேல், தனக்குரிய இந்த தண்ணீர் முழுவதையும் தானே பயன்படுத்த இந்தியா  திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் கட்கரி தனது டிவிட்டர்  பக்கத்தில், ‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இதுவரை கிழக்கு நதிகளில்  இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய நீரை தடுத்து நிறுத்தி, காஷ்மீர்,  பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பி விட முடிவு செய்துள்ளது” என பதிவிட்டார்.   இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்தும் விதம் பற்றி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நேற்று அறிககை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘சட்லெஜ்ஜில் பாக்ரா அணை, பியாஸ்  நதியில் போங் மற்றும் பந்தோ அணைகள், ரவியில் தெயின் (ரஞ்சித்சாகர்) அணை  ஆகியவற்றை இந்தியா கட்டியுள்ளது. தற்போது பியாஸ்-சட்லெஜ் இணைப்பு கால்வாய்,  மதோபூர்-பியாஸ் இணைப்பு, இந்திராகாந்தி நாகர் திட்டம் ஆகியவற்றின் மூலம்  கிழக்கு நதிகளின் 95 சதவீத நீரை இந்தியா பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

இது தவிர, தெயின் அணையின் நீர் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும்  தண்ணீரை தேக்க, ஷாபூர்கண்டி என்ற இடத்தில் ரவி நதியில் அணை ஒன்றை கட்டவும்  இந்தியா ஏற்பாடு செய்து வருகிறது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்  மாநிலங்களில் உள்ள 37,000 ஹெக்டேர் நிலங்கள் நீர்பாசனம் பெறும். மேலும் 206  மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும். அதேபோல, உஜ் பல்நோக்கு திட்டத்தின்  கீழ், கட்டப்படும் தடுப்பணை மூலம்  கிடைக்கும்  தண்ணீர் முழுக்க  ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு திருப்பி விடப்படும். ரவி -  பியாஸ்  இரண்டாவது இணைப்பு கால்வாய் மூலமாக கிடைக்கும் தண்ணீர் பஞ்சாப் உள்பட மற்ற  இந்திய மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கவலை கிடையாது பாகிஸ்தான் கருத்து

இந்தியாவின் முடிவு குறித்து பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கவாஜா ஷுமாயில் அளித்த பேட்டியில், ‘‘கிழக்கில்  இருந்து பாகிஸ்தான் நோக்கிப் பாயும் பியாஸ், ரவி, சட்லெஜ் நதி நீரை இந்தியா  தடுத்து நிறுத்தி, திசை திருப்பி விட்டால் அதுகுறித்து பாகிஸ்தான் கவலையோ  அல்லது எதிர்ப்போ தெரிவிக்க போவதில்லை. சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, அந்த  நீரை மக்களுக்கு வழங்கவோ அல்லது வேறுவித பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ  உரிமையுள்ளது. இதனால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது’’ என்றார்..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: