துறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு

* 110 கடைகளுக்கு நோட்டீஸ்

* மீன்வளத்துறை நடவடிக்கை

பெரம்பூர்: இந்தியாவின் 2வது பெரிய சரக்கு கையாளும் துறைமுகமாக, சென்னை துறைமுகம் உள்ளது. இங்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காக தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு மற்றும் கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. அதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் கன்டெய்லர் லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், வடசென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக அரசு இணைந்து கடந்த 2005ம் ஆண்டு 909 கோடி மதிப்பில், சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை திட்டம் செயல்படுத்த முடிவு செய்தன.

இதற்காக 2006ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கி ஆமை வேகத்தில் நடந்து வந்தன. பல்வேறுக்கட்ட போராட்டங்களுக்கு பின், 90 சதவீத பணிகள் முடிவடைந்தன. ஆனால், 1.6 கி.மீ.,க்கு, சென்னை மீன்பிடி துறைமுக சாலை பணி மட்டும் கிடப்பில் போடப்பட்டது.  காசிமேடு பகுதியில் வசிக்கும் மீனவர்கள், பழைய மீன் ஏலக்கூடத்தை விரிவுபடுத்தி தந்தால், நிலம் வழங்குவதாக சென்னை துறைமுகத்திடம் தெரிவித்தனர்.

இதற்காக சென்னை துறைமுகம், 2015ம் ஆண்டு 5 கோடி செலவில் புதிய மீன் ஏலக்கூடம் கட்டி கொடுத்தது.  இதில் புதியதாக 110 கடைகள் கட்டி கொடுக்கப்பட்டன. இருந்தும், நிலங்களை ஒப்படைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவர்களிடம் அரசு நடத்திய பலக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள், அரசு கட்டி கொடுத்துள்ள புதிய கடைகளை இனி பயன்படுத்த வேண்டும் எனவும், பழைய கடைகள் இடிக்கப்படும் எனவும் நேற்று நோட்டீஸ் ஒட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள், அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: