அமைச்சர், உதவியாளர், உறவினர், தொழிலதிபர் வீடுகளில் 2-வது நாள் ஐ.டி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது

வேலூர்: வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக நேற்று நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. மேலும் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.வேலூர் புதிய பஸ் நிலையத்தையொட்டி அமைந்துள்ள சாய் சிட்டி சென்டர் என்ற பெயரில் இயங்கும் ₹300 கோடி மதிப்பிலான நிலம் விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமமூர்த்தியும், ஜெயப்பிரகாசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று அமைச்சர் வீரமணியும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ₹300 கோடி பண பரிவர்த்தனை முறைகேடாக பயன்படுத்துவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும் டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டிலும், ஜோலார்பேட்டை- நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், அமைச்சரின் 2வது மனைவி பத்மாசினி வீடு ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென சோதனை நடத்த தொடங்கினர். இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதேவேளையில், ஜோலார்பேட்டை சோலையூர் அருகே வசித்து வரும்அதிமுக நகர செயலாளரும், அமைச்சரின் நேர்முக உதவியாளருமான எஸ்.பி.சீனிவாசன்(45) வீட்டில் சோதனை நடத்தினர். இங்கு நேற்று அதிகாலை 2 மணி வரை நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், வங்கி புத்தகங்கள் மற்றும் ஏராளமான வீட்டுமனை பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல், விவேகானந்தர் நகரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்  ராமமூர்த்தியின் வீடு, அலுவலகம், ராமமூர்த்தியின் தம்பி மோகன் வீடு, ராமமூர்த்தியின் நண்பரும், தொழிலதிபருமான ஜெயப்பிரகாஷ் வீடு, கே.வி.குப்பம் ரூசா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சிவக்குமார் வீடு ஆகியவற்றில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.

பல்வேறு இடங்களில் 2வது நாளாக நடந்த சோதனையில் மேலும் பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு, கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி புத்தகங்கள், வீட்டு மனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அளவுக்கு அதிகமாக பண பரிவர்த்தனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. கோடிக்கணக்கான பணபரிவர்த்தனை நடந்ததற்கான வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பணம் எப்படி வந்தது. யார் யாரிடம் பெறப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வங்கிகளுக்கு அழைத்து சென்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முறையாக அரசுக்கு வரி செலுத்தி உள்ளார்களா என்ற பணியில் வருமானவரித்துறை தணிக்கை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  சோதனைகள் இன்னும் முடியவில்லை. முடிந்தவுடன் முழு விவரங்களும் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து பத்திரிக்கை செய்தியாக அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: