×

ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கர தீவிபத்து

* மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
* 150 பெட், உடமைகள் எரிந்து நாசம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டதால், மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இந்த விபத்தில் 150 படுக்கைகள் மற்றும் உடமைகள் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் சவீதா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலை வளாகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, நர்சிங் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு, வெளிமாநில, வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, மாணவர்கள், மாணவிகளுக்கென தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இதில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் மாணவர்கள், தங்களது விடுதிக்கு சென்றனர். அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நேற்று அதிகாலை 4 மணியளவில் மாணவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, விடுதியின் 4வது மாடியில் இருந்து திடீரென குபுகுபுவென புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதை பார்த்ததும் மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சத்தம் கேட்டு அனைத்து அறைகளில் இருந்தும் மாணவர்கள் வெளியே ஓடி வந்தனர். தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. அறையில் இருந்த படுக்கை, ஆடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் தீப்பிடித்து எரிந்தது. மாணவர்கள், தீயை அணைக்க போராடினர். புகை அதிகமாக வெளியேறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே, அனைத்து மாணவர்களும் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர்.

தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் 9 அறைகளில் 150 பெட், மாணவர்களின் உடமைகள் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்த நாசமானது. 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சி திணறல் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெரும்புதூர் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீவிபத்து நடந்ததா அல்லது மாணவர்கள் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் போட்டதால் ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் கல்லூரி நிர்வாகத்தினரும் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,Sriperumbudur ,hotel , Sriperumbudur, private college accommodation, fire
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு