அதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்த கெடு முடிந்தது : ஓரிரு நாளில் முக்கிய முடிவு?

சென்னை: அதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்திருந்த கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கோரிக்கையை ஏற்காததால் 40 தொகுதிகளுக்கு தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவை இன்று அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட், ஒரு ராஜ்யசபா எம்பி சீட், பாஜகவுக்கு 5 சீட் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் கொடுப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். இதை ஏற்க தேமுதிகவினர் மறுத்து விட்டனர். பாமகவை விட அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் அதிமுக, தேமுதிக கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இதற்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார். திமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தை திருப்தி செய்ய வேறு என்ன யுக்திகளை கையாள்வது என்பது குறித்து அதிமுக தரப்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை மீண்டும் விஜயகாந்த்தை சந்தித்து பேசுவது என அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், பாமகவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இந்த முடிவுக்கு உட்பட்டால் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசப்படும் என்று அறிவித்தார்.

மேலும் இது தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நேற்று மாலை 4 மணி வரை அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடுவும் விதித்திருந்தார். கெடுவுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த முடிவு குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பிரேமலதாவும்,  சுதீசும் கூறி உள்ளனர்.

விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு  கட்டுப்படுவதாக கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள்  தெரிவித்தனர். ஆனால், தேமுதிக விடுத்த எச்சரிக்கைக்கு பிறகு அதிமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வருகிற 24ம் தேதி(நாளை) முதல் தேமுதிக சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்றும் விஜயகாந்த் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை 24ம் தேதி(நாளை) காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 6ம் தேதி மாலை 5மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணமாக ₹20 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ₹10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் இந்த முடிவை பார்த்து அதிமுக தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் திமுக தரப்பில் இருந்து கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிடிவி தினகரன் சார்பிலும் தேமுதிகவுக்கு தூது மேல் தூது வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் 25 தொகுதி போட்டியிடுங்கள். 15 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் எனவும் டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடுவதா, அல்லது வேறு அணியில் சேருவதா, 3வது அணியை உருவாக்குவதா? என அடுத்தடுத்து பல திட்டங்களை கையில் வைத்துள்ள தேமுதிக இன்று முதல் புதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் என்ன முடிவை எடுக்க போகிறார் என்ற பரபரப்பு தேமுதிகவினரை பற்றியுள்ளது.

எங்கள் பலத்துக்கு உரிய சீட் : பிரேமலதா பேட்டி

பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், தேமுதிகவுக்காள வாக்கு வங்கி என்ன, பலம் என்ன என்பது தேமுதிகவுக்கு தெரியும். எங்கள் பலத்துக்கு உரிய சீட் நிச்சயம் வரும். அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தேமுதிகவில் விருப்ப மனு தரலாம் என்று சொல்லியிருக்கிறோம். 24ம் தேதி நாளை முதல் தேமுதிகவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்பமனுக்கள் வாங்கப்படும். இழுபறி ஒன்றும் இல்ைல. நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக யோசித்து கொண்டிருக்கிறோம். அது தான் தவிர, வேறு ஒன்றும் கிடையாது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: