தோழிக்காக 7 சவரன் செயினை அடகு வைத்துவிட்டு வழிப்பறி கொள்ளையர்கள் பறித்ததாக பெண் நாடகம்: கணவனுக்கு பயந்து போலீசில் புகார் அளித்தது அம்பலம்

சென்னை: தோழிக்காக 7 சவரன் தாலி செயினை அடகு வைத்துவிட்டு, வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பொய் புகார் அளித்த சம்பவம் கே.கே.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் பழனி (38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா (34). நேற்று முன்தினம் மாலை கே.கே.நகர் காவல் நிலையத்தில் சுமித்ரா பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், பள்ளியில் படிக்கும் என் மகனுக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு கே.கே.நகர் பாலசுப்பிரமணியன் சாலையில் நடந்து சென்றபோது, ைபக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் 2 பேர், என்னை வழிமறித்து முகவரி கேட்பது போல் நடித்து, என் கழுத்தில் இருந்த 7 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர். என தெரிவித்து இருந்தார்.

புகாரின் படி, கே.கே.நகர் போலீசார் சம்பவ நடந்த பாலசுப்பிரமணியன் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேகம்படும் படி யாரும் பைக்கில் வரவில்லை. அதேநேரம் சுமித்ரா அவரது மகன் படிக்கும் பள்ளியின் அருகே உள்ள அடகு கடைக்கு சென்று வரும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே அடகு கடைக்கு சென்று விசாரித்த போது சுமித்ரா தனது தாலி செயினை  அடகு வைத்து 90 ஆயிரம் வாங்கி சென்றது தெரியவந்தது. பின்னர், போலீசார் சுமித்ராவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வீடியோ பதிவை காட்டி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சுமித்ரா தனது தோழி அவசர செலவுக்கு 1 லட்சம் கேட்டதாகவும், இதனால் தனது தாலி செயினை  அடகுவைத்து 90 ஆயிரம் பணத்தை கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

செயின் எங்கே என்று கணவர் கேட்டால் என்ன பதில் செல்வது என்று தெரியாமல், செயினை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றதாக கூறினேன் என்றார். அதைதொடர்ந்து போலீசார் சுமித்ராவை அவரது கணவர் பழனியை வரவழைத்து கடுமையாக எச்சரித்து இனி இதுபோல் செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: