குறைந்தபட்ச துளையில் ரத்தக்குழாய் தமனி அடைப்பை சரி செய்துஇதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ரோபோ மூலம் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக சென்னை அப்போலோ  மருத்துவமனையில் குறைந்தபட்ச துளையிடும் கலப்பு மறுகுழல் மயமாக்கல் (ஹைப்ரிட் ரீவாஸ்குலரைசேஷன்) அறுவை சிகிச்சை ரோபோட்டிக் முறையில் செய்யப்பட்டது குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் டாக்டர் யூசுப், இதய அறுவை சிகிச்சை பிரிவு இயக்குநர் ப்ராங்க் வான்ப்ரீத், இதய நோய் மருத்துவர் தாமோதரன் கலந்து கொண்டனர்.

அப்போது, டாக்டர் யூசுப் கூறியதாவது: சென்னையை சேர்ந்தவர் மல்லிகா (63).  இவருக்கு 6 மாதத்திற்கும் மேலாக அடிக்கடி நெஞ்சுவலி வந்தது. இவர், மோசமான  நிலையில் கடந்த 18ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பரிசோதனையில், இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் 2  அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்ற ரத்தநாள அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு பெரும்பாலும்  பாரம்பரியமான பைபாஸ் அறுவை சிகிச்சையே மேற்கொள்ளப்படும்.

இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்ப 3 முதல் 4 மாதங்கள் ஆகும். ஆனால்,  அப்போலோ மருத்துவமனையில் குறைந்தபட்ச துளையிடல் அறுவை சிகிச்சை குழு, அந்த பெண்ணுக்கு பாரம்பரிய அறுவை  சிகிச்சை மேற்கொள்ளாமல் ரோபோ உதவியுடன் குறைந்தபட்ச துளையிடல் கலப்பு மறுகுழல் மயமாக்கல் அறுவை சிகிச்சை மேற்கொண்டது. இந்த சிகிச்சையின்போது  இதயம் துடிக்கும்போது மார்பகத்தின் மத்தியில் சிறு கீறல் மூலம் அதிக திறன்கொண்ட நுண் கேமரா மற்றும் மானிட்டர் (தோராஸ்கோப்) உதவியுடன் இது  செய்யப்பட்டது. மேலும், இதயத்தின் மைய எலும்பில் பிளவு ஏற்படுத்தாமல் இந்த  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் நோயாளி எளிதிலும் விரைவிலும் இயல்பு  நிலைக்கு திரும்ப இயலும்.

இந்த சிகிச்சை முறை தனித்துவமான இரண்டு படிநிலைகளில்  வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. நோயாளிக்கு பிரதானமான மூன்றில் இரண்டு ரத்தநாள  தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதால் இதய செயல்பாடு மிகவும் குறைந்து இருந்தது.  அந்த பெண்ணுக்கு சில ரத்த நாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அதை அறுவை  சிகிச்சையின் மூலமோ ஆஞ்சியோகிராபி ஸ்டென்ட் வைப்பதன் மூலமோ குணப்படுத்த  இயலாது.

பெல்ஜியத்தின் ஆல்ஸ்டில் உள்ள ஓஎல்வி  மருத்துவமனையின் ரோபோடிக் மற்றும் குறைந்தபட்ச துளையிடும் முறையிலான இதய  அறுவை சிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் ப்ராங்க் வான்ப்ரீத்  வழிகாட்டுதல்படி,  ரோபோவை பயன்படுத்தி குறைந்தபட்ச துளையிடல் சிஏஜிபி  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறை நோய் தன்மையை நீக்கியதுடன் விரைந்து  குணமடைதலுக்கும் உதவியாக அமைந்தது.

இவ்வாறு டாக்டர் யூசுப் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: