முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா: ஏக்தா பிஷ்ட் அபார பந்துவீச்சு

மும்பை: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இந்தியா 49.4 ஓவரில் 202 ரன் குவித்து ஆல் அவுட்டானது.  தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகியூஸ் அதிகபட்சமாக 48 ரன் (58 பந்து, 8 பவுண்டரி) விளாசினார். கேப்டன் மித்தாலி ராஜ் 44 ரன் (74 பந்து, 4 பவுண்டரி), ஜுலன் கோஸ்வாமி 30, டானியா பாட்டியா 25, ஸ்மிரிதி மந்தனா 24, ஷிகா பாண்டே 11 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் எல்விஸ், ஸ்கிவர், எக்லஸ்டோன் தலா 2, ஷ்ரப்சோல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 13.2 ஓவரில் 38 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் ஹீதர் நைட் - நதாலியே ஸ்கிவர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 73 ரன் சேர்த்தது. ஸ்கிவர் 44 ரன் (66 பந்து, 5 பவுண்டரி) விளாசி ஏக்தா பிஷ்டின் துல்லியமான த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் ஹீதர் நைட் நங்கூரம் பாய்ச்சி நிற்க, அடுத்து வந்த வீராங்கனைகள் ஏக்தா பிஷ்ட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

கடைசி 3 வீராங்கனைகள் தொடர்ச்சியாக டக் அவுட்டாக, இங்கிலாந்து 41 ஓவரில் 136 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி 25 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஹீதர் நைட் 39 ரன்னுடன் (64 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஏக்தா பிஷ்ட் 8 ஓவரில் 25 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 2, கோஸ்வாமி 1 விக்கெட் வீழ்த்தினர். பிஷ்ட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2 வது போட்டி 25ம் தேதி நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: