அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 5 தொகுதிகள்... தலைவர்கள் மட்டுமே போட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் தலைவர்கள் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளனர்.அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 10க்கும் மேற் பட்ட இடங்கள் கிடைக்கும் என்று பாஜ தலைவர்கள் மட்டுமல்லாமல் 2ம்கட்ட தலைவர்களான எம்.என்.ராஜா, பி.டி.அரசகுமார், கே.டி.ராகவன், பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர்  அதிக நம்பிக்கையில் இருந்தனர். அதேபோல அண்மையில் அதிமுகவில் இருந்து பாஜவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சமகவில் இருந்து இணைந்த கரு.நாகராஜன், மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் ரவுண்டு கட்டி வரிசையில் நின்றனர்.மாவட்ட பாஜ தலைவர்களும் தங்களுக்கும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்இருந்தனர். ஆனால், எல்லோரது நம்பிக்கையும் பொய்த்து போனது. வெறும் 5 சீட்டுதான் பாஜவுக்கு கிடைத்துள்ளது.அதில், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கை எச்.ராஜா, தென்சென்னை அல்லது பெரும்புதூரில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இன்னும் ஒரு தொகுதியில் யாரை நிறுத்துவது என்பதில் போட்டி நிலவி வருகிறது. வழங்கப்பட்ட 5 தொகுதிகளில் முக்கிய தலைவர்கள்தான் களம் இறங்குவார்கள் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. இதனால் அணிகளின் தலைவர்கள், 2ம்கட்ட தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், அண்மையில் கட்சியில் இணைந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கட்சிக்காக உழைக்க நாங்கள் வேண்டும். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டும் தலைவர்கள்தான் வேணுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கட்சியில் அண்மையில் இணைந்த மாற்று கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தலைவர்களை அழைத்து லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனர். அவர்களும் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர். கட்சிக்கு செலவு செய்ய மட்டும்தான் நாங்களா? என்றும் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இதற்குதான் கட்சியில் இணைந்தோமா? என்றும் அவர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். இந்த திடீர் பிரச்னையால் பாஜவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், மக்களவை தேர்தலை சந்திக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இரு சக்கர வாகன பேரணி, பிரதமரின் மண்டல அளவில் காணொலி நிகழ்ச்சி, என் குடும்பம் பாஜ குடும்பம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: