தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 6.24 கோடி மதிப்பு 18 கிலோ தங்கம் 33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

* கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

* 2 சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்வது போல் கடத்தி வந்து பதுக்கி வைத்த ரூ.6.24 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க கட்டிகள் மற்றும் ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மண்ணடி தனியார் குடோனில் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், தங்கம் கடத்திய நபர்கள் விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்ணில் படாமல் 3 காரில் மின்னணு பொருட்களுடன் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய தகவலின்படி தங்கம் கடத்திய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, மண்ணடி மூர் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் கடத்தி வரப்பட்டு தங்கம் பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்தது. உடனே நேற்று காலை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, ஐ போன், வாட்ச், யூஎஸ்பி சிப், டிவைசர், கேமரா லென்ஸ் உட்பட மின்னணு பொருட்களில் பதுக்கி கடத்தி வந்த ரூ.6.24 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்கத்தை பறிமுதல் ெசய்தனர். மேலும், தங்கம் பதுக்க கொண்டு வந்த ரூ.1.1 கோடி மதிப்புள்ள மின்னணு சாதன பொருட்கள் மற்றும் ரூ.33 லட்சம் ஹவாலா பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 காரும் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம் பதுக்கிய குடோனுக்கு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஹாஜா மாலிக் என்பவர் தனது நண்பர்கள் 6 பேருடன் மலேசியா, துபாய், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கம் கடத்தலுக்கு உதவிய ெசன்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சுங்கத்துறை அதிகாரிகள், குடோன் உரிமையாளர் போட்டா ஹாஜா, தங்கம் கடத்திய மாலிக் உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 சுங்கத்துறை அதிகாரிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், கடந்த 18ம் தேதி மருத்துவ உபகரணங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1.97 கோடி மதிப்புள்ள 5.72 கிலோ தங்கம் மற்றும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.37.41 லட்சம் மதிப்புள்ள 1.13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  கடந்த 4 நாட்களில் மொத்தம் ரூ.8.58 கோடி மதிப்புள்ள 24.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: