திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொகுதி பங்கீடு  குறித்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் திமுக குழுவினருடன்  நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் தேசிய தலைவர் காதர் ெமாகிதீன், அபுபக்கர் எம்எல்ஏ, நிர்வாகிகள் ஷாஜகான், அப்துல் ரகுமான், அப்துல் பாசித் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சி தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின்னர் காதர்மொகிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களுக்கு தேவைப்படும் தொகுதிகளை தெரிவித்தோம். கூட்டணியில் பல்வேறு கட்சிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. எனவே ஒரு தொகுதியுடன் திருப்தியடையுங்கள் என்று திமுக தலைவர் கேட்டுக்கொண்டார். அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டோம். எந்த தொகுதி என்பதை திமுக தலைவர் அறிவிப்பார். நாங்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.  முன்னதாக மதிமுக கட்சியுடன் பேச்சு நடந்தது. திமுக சார்பில் துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி, ஐ.பெரியசாமி, நேரு, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் மதிமுக நிர்வாகிகள் கணேசமூர்த்தி, மல்லை சத்யா, செங்குட்டுவன், சிவந்தியப்பன், சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பின்னர் கணேசமூர்த்தி கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. எங்கள் தலைமையின் கருத்தை திமுக குழுவிடம் தெரிவித்தோம். அது பற்றி தலைமையுடன் பேசுவதாக கூறியிருக்கிறார்கள். நல்ல முடிவை எதிர்பார்த்து இருக்கிறோம். எத்்தனை தொகுதி என்பதை இரு கட்சிகளின் தலைமையும் முடிவு செய்யும். நாங்கள் போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை தந்துள்ளோம்’’ என்றார்.

பின்னர் திமுக குழுவினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், யூசுப், வன்னியரசு பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு திருமாவளவன் கூறுகையில், ‘‘நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுக குழுவுடன் பேசினோம். பட்டிலை தந்தோம். கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அவர்கள் பேசிய பிறகு மீண்டும் நாங்கள் பேசி முடிவு ஏற்படும். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக அமைந்திருந்தது. எத்தனை தொகுதி என்பதை முதலில் பேசுவோம். எந்த எந்த தொகுதி என்பதை பிறகு பேசுவோம். தனி சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம்’’ என்றார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி  சார்பில் இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி நிர்வாகிகள் பாலு, சக்தி,  தங்கவேல் ஆகியோர் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: