மாற்றம், முன்னேற்றம் அன்புமணி அல்ல மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி: அதிமுக, பா.ம.க. கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மாற்றம், முன்னேற்றம் அன்பு மணி அல்ல; மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று அதிமுக, பா.ம.க. கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார். சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ., மகன் சீனிவாசன்- சங்கீதா திருமணத்தை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று திருவேற்காட்டில் நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:   சுதர்சனம் மாங்காய் பிசினஸ் செய்வதாக துரைமுருகன் கூறினார். அதன் மூலம் வரும் வருவாய் இந்த இயக்கத்திற்கு பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவர் அந்த பணியை செய்கிறார். மாம்பழத்தில் அவருக்கு இப்படி ஒரு வருமானம். ஆனால், இன்னொருபுறம் மாம்பழத்தை வைத்துக் கொண்டு எப்பேர்பட்ட வருமானங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சில கூட்டணிக் கட்சிகளைப் பார்க்கிற போது, எப்படிப்பட்ட ஆசைகளுக்கு, எப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு எப்படிப்பட்ட நிலைமைகளுக்கு எல்லாம் ஆளாகியிருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திராவிட இயக்கத்தோடு கூட்டு வைக்க மாட்டோம் என்று ஒரு கட்சியின் நிறுவனத் தலைவர் பல ஆண்டுகாலமாக கொள்கை ரீதியாக சொல்லி வந்தார். இப்போது அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கிறார். இதனால் அதிமுக திராவிட இயக்கம் இல்லை என்பதை நாட்டிற்கு வெளிப்படையாக சொல்லியிருக் கிறார். அதுதான் உண்மையான நிலை,  2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது கொள்கைரீதியாக 3 முழக்கத்தை தெரிவித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தார்கள். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அந்த விளம்பரம் தான் வந்தது. வெளிநாட்டில் ஒரு தலைவர் வெளியிட்ட விளம்பரத்தை காப்பியடித்து போட்டார்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போட்டார்கள். இப்போது இந்தத் தேர்தலில் மாற்றிப் போட வேண்டும். எப்படி என்றால் மாற்றம், ஏமாற்றம், அன்புமணி அல்ல, மாற்றம் ஏமாற்றம் சூட்கேஸ் மணி. இப்படிப் போட வேண்டிய ஒரு நிலை வந்திருக்கிறது.

முதல்வர் என்று ஒருவர் இருக்கிறார். துணை முதல்வர் என்று ஒருவர் இருக்கிறார். அவர்களுக்கு நிர்வாகம் தெரியுமா? மக்களைப் பற்றி கவலைப்படுவார் களா? கொள்ளையடிப்பது, லஞ்சம் வாங்குவது, கமிஷன் வாங்குவது, கரெப்சன் நடத்தி தொழில் செய்வது என்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என பட்டவர்த்தனமாக பேசியவர்கள் இன்று அவர்களுடனேயே கூட்டணி வைக்கிறார்கள். இது சந்தர்ப்பவாத கூட்டணி, தேச துரோக கூட்டணி, மக்கள் விரோத கூட்டணி.  அ.தி.மு.க ஆட்சி கடல் தாண்டி ஊழல் கொடி நாட்டியிருக்கிறது. இந்தியாவின் பணத்தைத் தான் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளையும் கொள்ளையடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அக்கிரமம் நிறைந்த ஆட்சி இன்று தமிழ்நாட்டில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்ற நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. காக்னிசன்ட் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர்களும் அதிகாரிகளும் லஞ்சம் பெற்ற விவகாரம் பற்றி தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், சி.பி.ஐ அதிகாரிகளிடம் இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று புகார் மனு வழங்கியிருக்கிறார்.

ஒரு வாரத்திற்குள் முழுமையான விசாரணை நடைபெறவில்லை என்றால், நீதிமன்றம் சென்று குற்றவாளிகளை நாட்டிற்கு அடையாளம் காட்டுகிற முயற்சியை திமுக எடுக்கும் என்று உறுதியோடு  கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். ஆற்காடு வீராசாமி, வி.பி.துரைசாமி, காங்கிரஸ் நிர்வாகி கிருஷ்ணசாமி, ஆவடி நாசர், பகுதிசெயலாளர்கள் துக்காராம், பரந்தாமன், தி.மு.தனியரசு நிர்வாகிகள் நந்தகுமார், வழக்கறிஞர் கருணாநிதி, அங்குசாமி, தரணி, கண்ணப்பன், சிவசங்கரன், உதயா ராஜேந்திரன், குட்டிமோகன்,ராசா, அனந்தராமன், ஆசைத்தம்பி,   நித்யாதாசன், பாஸ்கரன், திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ. வி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: