69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் 69 சதவீதம் இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தின் மேல் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டே இருப்பதாக பாமக நீண்ட நாட்களாக தெரிவித்து வந்த அச்சம் இப்போது உறுதியாகி உள்ளது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று எழுப்பிய இரு வினாக்கள்தான் தமிழகத்தில் சமூகநீதி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது வழக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ‘‘இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதம் என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வினாக்களுக்கான விளக்கங்களை மார்ச் 14ம் தேதிக்குள் அளிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த வினாக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான விளக்கத்தை தமிழக அரசு எவ்வாறு வழங்கப்போகிறது? என்பதுதான் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ள எதிர்பார்ப்பாகும். இட ஒதுக்கீடு என்பது மக்கள்தொகை அடிப்படையிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி மற்றும் சமூக நிலையைக் கருத்தில் கொண்டும்தான் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 69 விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால், அந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு பெறத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 69 விழுக்காட்டை விட அதிகமாக இருக்கிறது என்று பொருளாகும். இதை உறுதி செய்யக்கூடிய புள்ளி விவரங்களின் உதவியுடன் நிரூபிப்பதன் மூலம் 69 சதவீத ஒதுக்கீட்டைக் காக்க முடியும்.  உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய அறிவுரையின்படி, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலமாக மட்டுமே 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: