திருச்சியில் இருந்து விமானத்தில் வந்தபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் மாயம்

சென்னை: திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் மாயமானது. தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவர், திருச்சியில் இருந்து கடந்த 17ம் தேதி காைல 8 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்தார். பின்னர் அவர், காரில் வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அவரது செல்போன் காணாமல் போனது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அமைச்சர், உதவியாளர் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீசார், சென்னை விமான நிலைய போலீசாருக்கு அதை நேற்றுமுன்தினம் அனுப்பினர். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் ஒரு அமைச்சரின் செல்போனே மாயமானால் சாதாரண பயணிகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

இதை தொடர்ந்து, விமான நிலைய போலீசார், விமான நிலைய அதிகாரிகளிடம் குறிப்பிட்ட அந்த தேதியில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அந்த விமானம் வந்த நேரத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கேட்டு பெற்று, ஆய்வு செய்தனர். அதேபோல, சம்பவம் நடந்த விமானத்திற்குள் பதிவாகியுள்ள காட்சிகளை ஏர் இண்டியா நிறுவனத்திடம் கேட்டு வாங்கி அதையும் ஆய்வு செய்கின்றனர். மேலும், இந்த செல்போன் சென்னையில் காணாமல் போனதா அல்லது திருச்சியில் விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே தவறிவிட்டதா என்பதை கண்டுபிடிக்க திருச்சி விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர். அதோடு திருச்சியில் இருந்து வந்த அந்த விமானம்  மீண்டும் விசாகப்பட்டினத்துக்கு செல்லும். அதற்கு முன்னதாக ஏர் இண்டியாவின் ஒப்பந்த ஊழியர்கள், விமானத்தை சுத்தப்படுத்துவார்கள். அந்த தேதியில் விமானத்தை சுத்தப்படுத்திய ஒப்பந்த ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை அமைச்சரின் செல்போன் பற்றி எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை. எனவே, செல்போன் விமானத்தில் மாயமானதா அல்லது விமானம் ஏற வருவதற்கு முன்பே மாயமானதா என்று விசாரணை நடந்து வருகிறது. சென்னை விமான நிலைய போலீசாரும் திருச்சி போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவிஐபிக்களுக்கு மட்டும் எப்படி?

தமிழக பாஜ தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜன் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு சென்றபோது  அவரது சூட்கேஸில் இருந்த ₹50,000 பணம் மாயமானது. அவர், சென்னை விமான நிலைய போலீசில் காலதாமதமாக புகார் செய்தார். அதிலும் இதுவரையில் பணம் எப்படி மாயமானது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக விவிஐபிக்களின் பணம், செல்போன் மட்டும் மாயமாவது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: