அதிமுகவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: விஜயகாந்தை சந்தித்தது உடல் நலம் விசாரிப்பதற்காகத்தான். அரசியல் பேச வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.     திமுக தலைவரும் எதிர்க்கட்சிதலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று அவரை நான் நேரில் சந்தித்தேன். அவரைவிட ஒரு வயது குறைவாக இருந்தாலும் அவர் என்னை மரியாதையோடு அன்போடு அண்ணன், அண்ணன் என்றுதான் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கக்கூடியவர். அதையும் தாண்டி கலைஞர் மீது அளவு கடந்த பாசமும் அன்பும், ஏன் பக்தியும் கொண்டிருந்தார். கலைஞர் மறைந்த நேரத்தில் விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தார். வெளிநாட்டில் இருந்து வீடியோ மூலமாக இரங்கல் செய்தியைச் சொல்லுகிற போது, தாங்க முடியாத அளவிற்கு சோகத்தில் மூழ்கி அவர் அழுத காட்சி இன்றைக்கும் நம் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டில், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து நேரடியாக கலைஞருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய காட்சி, அவர் கலைஞரிடத்தில் எந்தளவிற்கு பற்று வைத்திருந்தார் என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடியும்.

அவர் நல்லமுறையில் தேறி வந்திருக்கிறார். அவர் இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்து, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்று என் வாழ்த்துகளை திமுக சார்பில் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்.தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்களா? அதுபோன்ற அரசியல் பேசுவதற்காக நான் வரவில்லை, உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மனிதாபிமான உணர்வோடு அவரை சந்தித்தேனே தவிர நீங்கள் எதிர்பார்ப்பது போல் அந்தச் சந்திப்பு இல்லை.உங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் வரவேற்பீர்களா?உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள். நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: