தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். மதுரை வந்துள்ள பாஜக தலைவர் அமித்ஷாவை பன்னீர்செல்வம் இரண்டு முறை அடுத்தடுத்து சந்தித்து பேசியுள்ளார். தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஓரிரு தினங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் கூட்டத்தை முடித்துவிட்டு வந்த அமித்ஷாவுடன், ஓபிஎஸ் 2வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடன் இருந்தனர். மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிற்பகலில் மதுரை விமான நிலையத்தில் அமித்ஷா - ஓபிஎஸ் சந்தித்து பேசினர். விஜயகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, உடல்நலம் குறித்து விசாரிக்கவே விஜயகாந்தை சந்தித்ததாக ஸ்டாலினே கூறியுள்ளார் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். அதிமுக அமைத்துள்ள கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற உள்ள கூட்டணி என்றும் ஓ.பி.எஸ் பேட்டியளித்தார்.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 இடங்களும், பாமகவிற்கு 7 இடங்களும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: