எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: எம்.ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இந்த விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே ரூ.2.52 கோடி செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, காமராஜர் சாலையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி அகற்றப்பட்டது. மேலும் அந்த சாலையில் மேம்பாட்டு பணிகளை தவிர வேறு எந்த விதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனவே, தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத்தின்படி சாலையின் குறுக்கே எந்தவிதமான நிரந்தர கட்டுமானங்களையும் கட்டக்கூடாது என்றும், அரசியல் லாபத்திற்காக தற்போது இந்த நூற்றாண்டு வளைவு கட்டப்பட்டு வருவதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி கடந்த டிசம்பர் மாதம் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, எம்.ஜி.ஆர் வளைவு கட்டப்பட்டுள்ள காமராஜர் சாலை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவித்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: