மண்டைக்காடு கோயில் மாசி கொடை மார்ச் 3ல் தொடக்கம் குமரி-கேரளா இடையே 250 சிறப்பு பேருந்துகள்

குளச்சல் :  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவிற்கு குமரி- கேரளா இடைய 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் இந்த ஆண்டுக்கான மாசி கொடைவிழா வரும் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.

 விழாவையொட்டி முதல்நாள் காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30க்கு தீபாராதனை, 7.30 முதல் 8.30க்குள் திருக்கொடியேற்றம், தொடர்ந்து ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு திடலில் 82வது மாநாடு கொடியேற்றம், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, ஆன்மிக தொடர் விளக்கவுரை நடக்கிறது.

அதைத் தொடர்ந்து மாலை 5 முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பூஜை மற்றும் 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை, 10 மணி வரை சலங்கை பூஜை, பரதநாட்டியம் ஆகியவையும் நடக்கிறது. 2ம் நாள் முதல் 9ம் நாள் வரை தினமும் காலை பஞ்சாபிஷேகம், தீபாராதனை, மதியம் உச்சிகால பூஜை, மாலை சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. இரவு அத்தாழ பூஜை, காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை சமய மாநாடு நடக்கிறது. 3ம் நாள் முதல் 9ம் நாள் வரை காலை 8.30, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மாலை 4 மணியளவில் கோயில்களில் இருந்து யானை மீது களபம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு வருகிறது. 6ம் நாள் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு விழாவின் முக்கிய நிகழ்வான வலிய படுக்கை பூஜை நடக்கிறது.

9ம் நாள் இரவு 9.30 மணியளவில் பெரிய தீவெட்டி அலங்கார பவனியுடன் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 10ம் நாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு சாஸ்தான் கோயிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 4.30 முதல் 5 மணி வரை அடியந்திர பூஜை, குத்தியோட்டம் நடக்கிறது.

பிற்பகல் கடந்த கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 6.30க்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல். இரவு 10 மணிக்கு இன்னிசை, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பவனி, 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை. பின்னர் தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.

மண்டைக்காடு கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இருப்பினும் பக்தர்கள் வருகை இப்போதே அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதி களை கட்டி காணப்படுகிறது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம்.  இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு மற்றும் கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. 2 போக்குவரத்து கழகங்களும் திருவனந்தபுரத்தில் இருந்து தலா 16 பஸ்களை வரும் 1ம் தேதி முதல் இயக்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது தவிர களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், குமாரகோவில், தக்கலை, திங்கள்சந்தை, நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து மண்டைக்காட்டுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து மேலும் கூடுதல் பஸ்களை இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: