பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா

* பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சியை  அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை  முன்னிட்டு  நேற்று  பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.  கோவை மாவட்டம்  பொள்ளாச்சியை அடுத்த  ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த  4ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான கடந்த 17ம்  தேதி  நள்ளிரவு மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம்  இரவில்,  சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் அம்மன் திருவீதி உலா  நிகழ்ச்சி  நடந்தது. பின்னர், இரவு சுமார்  10 மணியளவில் சுமார் 40அடி நீளம், 12அடி அகலமுடைய குண்டத்தில்  சுமார் 35டன்  விறகால் பூ (அக்னி) வளர்க்கப்பட்டது.

இதை  தொடர்ந்து,நேற்று   காலை 7.30 மணியளவில், விரதமிருந்து காப்புக்கட்டிய   பக்தர்கள் உப்பாற்றில் நீராடினர். பின் 8 மணியளவில் மாசாணியம்மனுக்கு   சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அங்கிருந்து தலைமை முறைதாரர் மனோகரன்  பூப்பந்துடன் கூடிய பேழைப்பெட்டியை தலையில் சுமந்து கொண்டுவர,  அருளாளி  அருண்குப்புசாமி உள்ளிட்டோர் குண்டம் இறங்கும் பக்தர்கள் உடன் குண்டம்  நோக்கி வந்தனர்.

alignment=

பின்னர் அருளாளி அருண் குப்புசாமி பேழைப்பெட்டியில்  இருந்த பூப்பந்தை  உருட்டி விட்டு முதலில் குண்டம் இறங்கினார். இதை  தொடர்ந்து ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன்  செலுத்தினர். அந்நேரத்தில்  குண்டத்தின் மேலே வானில், கருடன் மூன்று முறை  சுற்றி வந்தது. அப்போது,  அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அம்மா தாயே, மாசாணி  தாயே என்ற பக்தி கோஷம்  எழுப்பினர்.

 மேலும், பாதுகாப்பு பணியில்  ஈடுபட்ட போலீசார் மற்றும்  வனத்துறையை சேர்ந்த சிலரும் குண்டம் இறங்கினர்.  ஆண்  பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும், பெண்கள் குண்டத்தில் மலர்   தூவியும், வணங்கியும் சென்றனர்.  இந்த குண்டம் திருவிழா நிகழ்ச்சியில்,   துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்பி., மகேந்திரன், எம்எல்ஏ.,  கஸ்தூரி வாசு,  முன்னாள் கோவை மேயர் செ.ம. வேலுச்சாமி, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்  நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

  ஆனைமலை மாசாணியம்மன் கோயில்  குண்டத்திருவிழாவை காண கோவை, திருப்பூர்,  ஈரோடு, மதுரை திண்டுக்கல், கரூர்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 1  லட்சத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் வந்திருந்தனர். இதையடுத்து  இன்று (21ம் தேதி) காலை 9 மணிக்கு மஞ்சள்  நீராடுதல், இரவு 8 மணிக்கு  மகாமுனி பூஜையும், நாளை 22ம் தேதி பகல் 12  மணியளவில் மாசாணியம்மனுக்கு மகா  அபிஷேக அலங்கார பூஜையுடன் விழா  நிறைவடைகிறது என கோயில் நிர்வாகத்தினர்  தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: