ஜலகண்டேஸ்வரர் நந்தி.. தேவாலய கோபுரம் ... நீர்வற்றிய மேட்டூர் அணை பகுதியில் நினைவுகளில் மூழ்கும் பொக்கிஷங்கள்

* வரலாற்று ஆர்வலர்கள் சுவாரஸ்ய தகவல்

Advertising
Advertising

மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் தென்பட ஆரம்பித்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தியும்,தேவாலய கோபுரமும் நமது முன்னோர் வடித்த அற்புதங்கள் என பெருமிதம் கொள்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள். காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரை தேக்கி வைத்து தஞ்சை சீமையின் சாகுபடிக்கு பயன்படுத்தும் வகையில் சேலத்தை அடுத்துள்ள மேட்டூரில் 1925ம் ஆண்டில் அணை கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமானது.இதற்காக நீர்த்தேக்கப்பகுதிகளான சாம்பள்ளி, புதுவேலமங்கலம், காவேரிபுரம்,  கோட்டையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வசித்து மக்கள் அங்கிருந்து  வெளியேறினர். அப்போது காவேரிபுரம் என்ற கிராமத்தில் இருந்த  ஜலகண்டேஸ்வரர் கோவில்மற்றும் அந்த கோவிலின் முகப்பில் இருந்த நந்தி சிலை,  கோட்டையூரில் இருந்த ராஜா கோட்டை,புதுவேலமங்கலத்தில் இருந்த வீரபத்திரன்  கோவில்,பண்ணவாடியில் இருந்த இரட்டை கிறிஸ்தவ கோபுரங்கள் என்று அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு,கண்ணீரில் மூழ்கிய படி வெளியேறினர்.

பொங்கி வந்த நீரானது அந்த கிராமங்களுடன்  சேர்த்து, அங்கிருந்த ெபாக்கிஷங்களையும்  அணை நீரில் மூழ்கடித்தது. ஆண்டு தோறும் அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்கும் போது பண்ணவாடி  நீர்தேக்கப்பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருக்கும் நந்திசிலையும், கிறிஸ்தவ  தேவாலய கோபுரமும் வெளியே தெரிவது வழக்கம். அந்த வகையில் தற்போது அணையின்  நீர்மட்டம் 70 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில் இந்த பொக்கிஷங்கள் இரண்டும்  வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. தூரத்தில் இருந்து நாம் பார்க்கும் இந்த  அபூர்வ பொக்கிஷங்களின் வரலாறும் அளப்பரியது என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.

alignment=

இது குறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது:மேட்டூர் அணையில் நீர்இல்லாத காலங்களில் நாம் பார்க்கும் ஜலகண்டேஸ்வரர் ேகாயில், கி.பி.9ம்  நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிர கூட மன்னன், கன்னிதேவன் முதலாம் கிருஷ்ணன் காலத்தில் கட்டப்பட்டது.முதலாம் கிருஷ்ணன் பராந்தக சோழனின் சம காலத்தவன்.இந்தக் கோயில் அந்தக்காலத்தில் நட்டீஸ்வரர்கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கோபுரத்தின் உச்சியில் பெரிய நந்தியைக்கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது.அதனையடுத்து கருடகம்பம்,கொடிமரம்,கல்லால் செதுக்கப் பட்ட நந்தி,பலிபீடம் போன்றவை உள்ளது.

இதற்கடுத்து 20 தூண்களைக் கொண்ட ஒரு மகாமண்டபம் உள்ளது.மேட்டூர் அணையின் சேற்றிலும், தண்ணீரிலும் 85 ஆண்டுகளாக மூழ்கியிருந்தாலும் கோயில் இன்னும் அப்படியே அழகாகவும், புதுப்பொலிவோடும்  இருப்பது வியப்பு.அணையில் தண்ணீர் மேலும் குறைந்தால், ஜலகண்டேஸ்வரர் கோயில் நுழைவுவாயிலின் இருபுறமும் கல்லால் ஆன  துவாரபாலகரின் அழகிய சிலைகளையும் பார்க்கலாம். திருமால்,பைரவர் கோயிலும் தெரியும். கோயிலின் சேவைக்கு காவிரியிலிருந்து நீர் எடுப்பதற்கான படித்துறையும் இங்ேக அமைந்திருக்கிறது.

கோயிலின் தென்மேற்குப்பகுதி அந்தகாலத்தில்,பவானி தாலுகாவைச் சார்ந்துள்ளது.இந்த நகரத்திற்கும் இதன் உள்ளே மூழ்கிய சாம்பள்ளிக்கும் முக்கிய சாலை வசதி இருந்துள்ளது.இந்த  கோயிலில் இருந்த மூலபஞ்சலோக விக்ரகங்கள் அனைத்தும் இப்போது இருக்கும் காவிரிபுரம்  பாலவாடி சிவன் கோயிலில் காணப்படுகிறது. இவ்வாறு வரலாற்று ஆர்வலர்கள் கூறினர்.  தேவாலயம்:‘‘கி.பி.,17ம் நூற்றாண்டில் காவிரி கரையோரத்தில் இருந்த நாயம்பாடி கிராமத்தில் கொடிய பிளேக் மற்றும் காலரா நோய் பரவியது. போதிய சிகிச்சை வசதி கிடைக்கததால்,ஏராளமான மக்கள் நோய்க்கு பலியாகினர்.அப்போது நாயம்பாடி பகுதியில்,பிளேக் நோயில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டிய கிராம மக்கள்,தூய ஆரோக்ய நாதர் சொரூபத்தை வைத்து வணங்கியுள்ளனர்.

அக்காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து மதபோதகராக தமிழகம் வந்த,பிரான்சிஸ் நாயம்பாடியில் ஒரு தேவாலயம் எழுப்பினார்.இப்படிப்பட்ட நிலையில் 1925ல் மேட்டூர் அணை கட்டுமான பணி துவங்கியது. அணையில் நீரை தேக்குவதற்காக அப்படியே விட்டு,சென்ற தேவாலயத்தின் ஒற்றைக் கோபுரம் தான்,தற்போது நம் கண்ணில் படுகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோபுரம் நூறடி உயரத்தில் சுட்டசெங்கற்கள் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது. சில வருடங்களுக்கு முன்புவரை,இரட்டை கோபுரமாக இருந்தது.தற்போது ஒரு கோபுரம் சாய்ந்து அங்கேயே கிடப்பது குறிப்பிடத்தக்கது,’’என்பதும் வரலாற்று ஆர்வலர்கள் கூறும் தகவல்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: