மஞ்சள் குவிண்டால் ₹8ஆயிரத்திற்கு விற்பனை

சேலம் :  சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிக்கு புது மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. குவிண்டாலுக்கு ₹1000 அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் ஈரோட்டுக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் மஞ்சள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்தில் அறுவடை செய்யும் மஞ்சளை விவசாயிகள் ஈரோடு, சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. புது மஞ்சளை வியாபாரிகள் எதிர்பார்த்து கொண்டு இருந்ததால் உரிய விலை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு அறுவடை செய்த, புது மஞ்சளை தற்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். மார்க்கெட்டுக்கு வரும் புது மஞ்சளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏலத்தில் மஞ்சள் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இது குறித்து சேலம் மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் அறுவடை செய்யும் மஞ்சளை விவசாயிகள், சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிக்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கும். கடந்த சில நாட்களாக இருப்பில் உள்ள மஞ்சள் தான் விற்பனைக்கு வந்தது. பழைய மஞ்சளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் காட்டினர்.

இதன் காரணமாக வழக்கம் நடக்கும் ஏலத்தில் இருந்து குவிண்டாலுக்கு ₹1000 முதல் ₹2 ஆயிரம் வரை விலை சரிந்தது. இந்த நிலையில் நடப்பு வாரத்தில் இருந்து புது மஞ்சள் வர தொடங்கியுள்ளது. புது மஞ்சளில் வாசனை அதிகம் இருக்கும் காரணத்தால், புது மஞ்சளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். நேற்று நடந்த ஏலத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக விலை போனது.  சேலம் லீ பஜார் மஞ்சள் ஏலத்தில் 30 டன் மஞ்சள் விற்பனைக்கு வந்தது. ₹25 லட்சத்திற்கு ஏலம் போனது. குவிண்டால் ₹8000 முதல் ₹9000 ஏலம் நடந்தது. கடந்த வாரம் குவிண்டால் ₹7000 முதல் ₹8000 ஏலம் போனது. குவிண்டாலுக்கு ₹1000 அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: