5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : தமிழ்நாட்டில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்தது. கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியாக நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம், ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி அதுகுறித்து முடிவு எடுக்க உள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். இந்தியாவிலேயே பள்ளி கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருவதாகவும், கல்வித்துறைக்கு பல கோடி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது என செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு சார்பில் தினமும் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது என்றும், பொது மக்களின் அடிப்படை வசதிகள் யாவும் உடனுக்குடன் அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: