கந்திலி ஒன்றியத்தில் ₹60 லட்சத்திற்கு மேல் மின்கட்டணம் பாக்கி ஆதியூர் ஊராட்சியில் தெருவிளக்குகளை கழற்றி சென்ற அதிகாரிகள்

* இருளில் மூழ்கிய கிராமங்கள்

திருப்பத்தூர் : கந்திலி ஒன்றியத்தில் ₹60 லட்சத்திற்கும் மேல் மின்கட்டணம் பாக்கி உள்ளதால் ஆதியூர் ஊராட்சியில் மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்குகளை கழற்றி சென்றனர். இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சியில் ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 39 ஊராட்சிகள் உள்ளது. இங்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கால்வாய், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊராட்சிகளுக்கு தேவையான தெருவிளக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கான மின் இணைப்பு மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. அதற்கான தொகை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சுமார் ₹60 லட்சத்திற்கும் மேல் பல ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தவில்லையாம். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், நேரில் சென்றும் மின்கட்டணத்தை செலுத்த முன்வரவில்லையாம்.

இதனால், நேற்று முன்தினம் இரவு ஆதியூர் ஊராட்சியில் உள்ள கே.கே நகர், தில்லை நகர், ஆதியூரில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தெருவிளக்குகளின் இணைப்புகளை மின்சாரத் துறையினர் துண்டித்து, தெருவிளக்குகளை கழற்றி சென்றனர். இதனால் இரவு முழுவதும் இந்த ஊராட்சியில் அனைத்துப் பகுதியும் இருளில் மூழ்கி கிடக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிப்பணத்தையும் பொதுமக்களாகிய நாங்கள் முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால் அதனை ஊராட்சி நிர்வாகத்தினர் சரியான முறையில் செலுத்தாமல், தற்போது மின் இணைப்பு துண்டிக்கும் நிலை எங்கள் ஊராட்சியில் ஏற்பட்டுள்ளது. இதனால் தெருக்களில் மின்விளக்கு இன்றி நாங்கள் இருளில் தவித்து வருகிறோம்’ என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ‘மின்வாரிய அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கந்திலி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செலுத்தவில்லை. ₹60 லட்சத்துக்கும் மேல் மின்வாரியத்திற்கு பாக்கி வைத்துள்ளனர். எனவே, புதிதாக வந்துள்ள அப்பகுதி மின்வாரிய அதிகாரி இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிகாரியிடம் வந்து பேசி பணத்தை கட்டுவதாக தெரிவித்தனர். அதன்பேரில், ஓரிரு நாட்களில் கழற்றப்பட்ட மின்விளக்குகள் மீண்டும் அமைக்கப்பட்டும்’ என்றார். மின்இணைப்பு துண்டிப்பு குறித்து பிடிஓ சீனிவாசனிடம் கேட்டதற்கு, ‘அப்படி ஒரு சம்பவம் எதுவுமே நடக்கவில்லை’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: