5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததை கண்டித்து முதன்மை தலைமை பொறியாளரை உதவி பொறியாளர்கள் முற்றுகை: பொதுப்பணித்துறையில் பரபரப்பு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவில் 700க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில், காலி பணியிடங்களின் பேரில் அவ்வப்போது உதவி பொறியாளர்கள் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த 2014க்கு பிறகு உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், 5 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். இதை கண்டித்து, பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க மாநில செயலாளர் அன்பு தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் குழுவினர் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலத்தை நேற்று பிற்பகல் முற்றுகையிட்டனர்.

அப்போது, கடந்த 2014 முதல் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் உதவி பொறியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று முதன்மை தலைமை பொறியாளரிடம் முறையிட்டனர். மேலும், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் மேலும் காலி பணியிடங்கள் அதிகரிக்கும் என்பதால் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரினர். இதற்கு, முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம் அரசிடம் பேசி முடிவு செய்வதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து உதவி பொறியாளர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட உதவி பொறியாளர்கள் கூறும்போது, ‘இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர்களுக்கு 3:1 என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 2014ல் 155 அரசாணையின்படி 3:2 என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு தரப்பும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை காரணமாக வைத்து பதவி உயர்வு கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: