அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 3087 சிலை பாதுகாப்பு அறை கட்ட 330 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு போலீஸ்வீட்டு வசதி கழகம் மூலம் கட்ட முடிவு

*ஆணையர் பணீந்திர ரெட்டி தகவல்

சென்னை, பிப்.21: தமிழகம் முழுவதும் 3087 சிலை பாதுகாப்பு அறை கட்ட 330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் மூலம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.  தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடங்கும். இந்த கோயில்களுக்கு சொந்தமாக 3.80 லட்சம் கற்சிலைகள், உலோக திருமேனிகள், விக்ரகங்கள் உள்ளன. இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் மவுசு என்பதால் சமூக விரோதிகள் அதிகாரிகள் சிலருடன் கைகோர்த்து சிலைகளை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.

இதனால், சமீபகாலமாக கோயில்களில் சிலைகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை இல்லாததால்தான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, முதற்கட்டமாக 3087 கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது. இந்த அறையில் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் வைக்கப்படுகிறது. சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்பட உள்ள கோயில்கள் கண்டறியப்பட்டு, அதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டன.

ஏற்கனவே, பந்தநல்லூரில் உள்ள சிலை பாதுகாப்பு அறையை மாதிரி வடிவமைப்பாக வைத்து, அதுபோன்றே தமிழகம் முழுவதும் 3087 கோயில்களிலும் சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் 330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பணிகளை தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது என்று அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.  இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் மேலும் கூறும்போது, ‘ஐகோர்ட் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 3087 கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த துறை சார்பில் மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனால், சிலை பாதுகாப்பு அறை அமைக்க மேலும் காலதாமதம் ஆகும். எனவேதான் தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: