×

அதிமுக., பாஜக., பாமக என்று கட்சிகள் என்னதான் கூட்டணி வைத்தாலும் திமுக வெற்றியை யாராலும் அசைக்க முடியாது: ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுக., பாஜக, பாமக என்று என்ன தான் கூட்டணி வைத்தாலும், தி.மு.க வெற்றியை அசைக்க, தி.மு.க வை ஆட்ட, தி.மு.க.வை தோற்கடிக்க யாராலும் முடியாது என்று பூந்தமல்லியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டம். வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொரட்டூரில் ஊராட்சி சபைக் கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின்னர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு குறைகளை கேட்டார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பூந்தமல்லி தொகுதி போன்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் வரும் வாய்ப்பு இருக்கிறது. 18 தொகுதியோடு சேர்த்து இன்னும் 3 தொகுதிகள் 21 தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது.இந்த 18 தொகுதிகளிலும் ஒரு வருட காலமாக எம்.எல்.ஏ இல்லாமல் ஒரு அனாதைத் தொகுதியாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் 21 தொகுதிகளிலும் என்னுடைய பயணத்தை மேற்கொண்டு கிராமசபைக் கூட்டத்தை மட்டும் நடத்த வில்லை.  பூந்தமல்லியின் பாக முகவர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களை சந்தித்து, பாக முகவர்கள் தேர்தல் வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்லா மல், அனைத்தும் முறையாக இருக்கிறதா என்று அதையும் சரிபார்க்கப் போகிறேன். உங்கள் பிரச்னைகளை நான் மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் பேசி, செய்யச் சொல்லி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. இப்பொழுது நடக்கிறதோ நடக்கவில்லையோ திமுக ஆட்சி வந்ததும் இவை நிச்சயமாக செய்து தரப்படும்.

உங்களைப் பார்க்கிறபோது, திமுக தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறீர்கள். இதுவே ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி  வெற்றி வெற்றி என்பதை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். தி.மு.க நிச்சயம் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற நம்பிக்கை எங்களை விட உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வேலையாக திட்டங்கள் தீட்டப் போகிறோம், சாதனைகள் செய்யப் போகிறோம் மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம். முதல் வேலையாக தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் போகிறோம். பி.ஜே.பி ஆட்சி வந்ததற்குப் பிறகு தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக நம் வீட்டுப்பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியில் படிக்கக்கூடாது என்பதற்காக கொண்டு வந்ததுதான் நீட் தேர்வு. பி.ஜே.பி.க்கு பக்கபலமாக ஊழல் அ.தி.மு.க சேர்ந்திருக்கிறது. பி.ஜே.பி தனியாக நின்றால் ஜெயிக்க முடியாது என்பது அ.தி.மு.கவிற்கு நன்றாகத் தெரியும். வாங்குகிற ஓட்டுகூட இவர்களோடு சேர்ந்தால் கிடைக்காது என்றும் தெரியும். தெரிந்திருந்தும் ஏன் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் பயம். மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பாமக தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி இந்த ஆட்சி பற்றி அதிமுக என்ற கழகத்தின் கதை என்று இவர்களின் கொள்ளை ஊழல்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். என் உயிரே போனாலும் அ.தி.மு.க வோடு சேர மாட்டோம். திராவிட இயக்கங்களின் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டோம், திராவிட இயக்கத்தை ஒழிப்பது தான் எங்கள் முதல் வேலை என்று சொன்னவர்கள் யார்? பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள்தான்.  ஆனால், இன்று போய் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் என்ன காரணம், வேறொன்றும் இல்லை, ஏதோ ஒரு ஆசையின் காரணமாக அங்கு சேர்ந்துகொண்டு கூட்டணி என்ற நாடகம். என்ன தான் கூட்டணி வைத்தாலும், தி.மு.க வை அசைக்க தி.மு.க வை ஆட்ட, தி.மு.க.வை தோற்கடிக்க யாராலும் முடியாது. அது நன்றாக தெரிந்திருக்கிறது.

ஜெயலலிதா இருந்த போது பி.ஜே.பி.யோடு சேரவில்லை, பாட்டாளி மக்கள் கட்சி யோடு சேரவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியை ஒழிப்பது தான் ஜெயலலிதாவின் முதல் வேலை. அதேபோல் ஜெயலலிதாவை ஒழிப்பது தான் எங்கள் முதல் வேலை என்று ராமதாஸ் சொன்னார்.   இன்று அந்தக் கட்சியோடு இவர்கள் கூட்டணி வைத்திருக்கின்றார்கள். அதைப்பற்றி கவலையில்லை. எது எப்படியிருந்தலும், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க. வைப் பொறுத்தவரை மக்களோடு கூட்டணி வைத்து தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப் போகிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.பொய்யைச் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். அப்படிப்பட்ட அபாண்ட பொய்யைச் சொல்லி பிஜேபி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், இப்போது திடீரென்று விவசாயிகளுக்கு 3 தவணையாக ₹ 2,000 என்று 6,000 கொடுக்கப் போவதாக அறிவிக்கிறார். இதுவும் ஒரு திருட்டுத்தனம். மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுகிற பொய்.

இவர்களால் விவசாயிகளுடைய கடனைக் கூட தள்ளுபடி செய்ய முடியவில்லை. கிராமங்களில் விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்று சொல்லுவார்கள். 5 கொலை நடந்துள்ளது. ஆனால், எதுவும் நடக்காதது போன்று எடப்பாடி கம்மென்று இருக்கிறார்.  கடப்பாரையை முழுங்கிக் கொண்டு கம்முனு இருக்கான் பாரு என்று சொல்லுவார் கள். அதுபோல் கடப்பாரையை முழுங்கி விட்டு கம்மென்று இருப்பது யார் என்றால் எடப்பாடி பழனிசாமி தான். ஆகவே இந்த ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கு உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வரும், மத்தியில் புதிய ஆட்சி தி.மு.க அங்கீகரிக்கிற, தி.மு.க ஆதரவு தருகிற தி.மு.க கூட்டணியில் ஒரு ஆட்சி உருவாகப் போகிறது. யார் பிரதமர் என்று தி.மு.க சொல்லும் நிலையில் இன்று இருக்கிறது.

21 தொகுதியோடு சேர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தேர்தல் வரவேண்டும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். உங்களுக்காக நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.  பூந்தமல்லி ஒன்றியம், புதுச்சத்திரத்தில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்துக்கும், நசரத்பேட்டையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டத்துக்கும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கொத்தியம்பாக்கம் டி.தேசிங்கு, பூவை எம்.ெஜயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். பூவை எம்.ரவிக்குமார், ஆர்.ெஜயசீலன், புஜ்ஜிராமகிருஷ்ணன், தி.வே.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, இ,பரந்தாமன், பூவை ஜெரால்டு, ஆதிசேஷன், திராவிடபக்தன், கே.ஜெ. ரமேஷ், காயத்திரி தரன், மா.ராஜி, திருமலை, ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், ப.சிட்டிபாபு, கா.பிரபு கஜேந்திரன், ஆவடி நாராயண பிரசாத், திருமழிசை உ.வடிவேலு, பூவை ஜே.சுதாகர், எம்.பர்கத்துல்லாகான், ஒதிக்காடு வி.பாலாஜி, பி.அலெக்ஸ், ஈக்காடு முகமது ரபி, எஸ்.வேலு, எல்.சரத்பாபு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,BJP. ,victory ,Mamata Banerjee ,DMK ,council meeting ,Panchayat ,MK Stalin , AIADMK, BJP, PM, parties, MK Stalin
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி