சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: விமானத்துக்கு சார்ஜ் ஏற்றும் வாகனத்தில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் நடைமேடைகள் உள்ளன. அதில் நடைமேடை 54 மற்றும் 55க்கு இடைப்பட்ட இடத்தில் விமானங்களுக்கு சார்ஜ் ஏற்றக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4.30 அளவில் அந்த வாகனத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறந்தது. பின்னர் திடீரென சிறிது நேரத்தில் அதில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறி வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, விமான நிலைய தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து 3 தீயணைப்பு வானங்கள் விரைந்து வந்தன. அதில், ஒரு வாகனம் தீப்பற்றி எரிந்த வாகனத்தை அணைக்கும் பணியில் ஈடுபட மற்ற 2 வாகனங்கள் அருகில் உள்ள வாகனங்கள் மற்றும் விமானங்கள் மீது தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பின்னர் அரை மணி நேரத்தில் வாகனத்தில் பிடித்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிலைய உயர் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்த வாகனம் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், தீ விபத்து சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள டிஜிசிஏ (டிரைக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன்) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்து நடந்த போது 54-55 விமான நடைமேடை பகுதியில் விமானங்கள் நின்றிருந்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். அதேபோன்று, விமானம் சார்ஜ் செய்யப்பட்டு இருந்தால் அந்த விமானமும் சேர்ந்து தீப்பிடித்திருக்கும் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.15 வரை விமானங்கள் இயக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: