ஒரு வாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் குடிநீர் வாரியத்தை கண்டித்து போராட்டம்: திமுக எம்எல்ஏ எச்சரிக்கை

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 168வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உள்ளகரம், ஆயில் மில் பகுதி, ராஜா ரத்தினம் தெரு, பொன்னப்பர் தெரு, உஷார் நகர் போன்ற பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய், சாலைகள், குப்பை கிடங்குகள் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அங்கு சேதமடைந்த கால்வாய்களையும், கழிவுகளையும் உடனே அகற்றுமாறும், தேங்கிய குப்பைகளை வெளியேற்றுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பிறகு உள்ளகரம் புழுதிவாக்கம் நலச்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடந்த பொதுகூட்டத்தில் கலந்துகொண்டார். அப்ேபாது நிர்வாகிகள் தரப்பில், ‘புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், எம்ஜி நகரில் உள்ள குடிநீர் தொட்டி மூலம் எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், சீரான மின்வினியோகத்துக்காக கூடுதல் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு அளித்தனர்.

மனுக்களை பெற்றுகொண்ட அவர், ‘துணை மின்நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது, அது முடிந்தவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வசதி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். எம்.ஜி.நகர் குடிநீர் தொட்டியில் இருந்து, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன். ஒரு வாரத்தில், குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றால் குடிநீர் வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். கூட்டத்தில், சோழிங்கநல்லூர் பகுதி திமுக செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் திவாகர், கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மதிவதனன், தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: