ஐகோர்ட் வழங்கிய இடத்தில் நடத்தி வந்த நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி சாலையோர கடை அகற்றம்

* மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை

* தரைமட்டமானது 7 ஆண்டு உழைப்பு

சென்னை: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோரம் நடத்தி வந்த தனது கடையை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளியதாகவும், இதனால் தனது 7 ஆண்டு உழைப்பு தரைமட்டமாக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதாகவும் ரவணா என்ற வியாபாரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாசாலையில் பல ஆண்டுகளாக சாலையோர வியாபாரிகள் கடைகள் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இந்த கடைகளை திடீரென்று மாநகராட்சி அகற்றியது. இதை எதிர்த்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்க உத்தரவிட்டது.

அதன்படி  177 பேருக்கு அண்ணாசாலை காயிதே மில்லத் கல்லூரி பின்புறம் உள்ள இ.பி இணைப்பு சாலையில் மாற்று இடம் வழங்கி கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் அங்கு கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் ரவணா என்பவரின் கடையை மட்டும் இடித்து தள்ளியுள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தனது கடையை  மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ரவணா கூறியதாவது:  நான், அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் அருகில் 31 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தேன். கடந்த 2011ம் ஆண்டு மாநகராட்சி எங்களது கடைகளை அகற்றியபோது நீதிமன்ற உத்தரவின்படி எனக்கு இபி இணைப்பு சாலையில் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக அங்கு கடை நடத்தி வருகிறேன். இந்த கடைக்கு மின்சார இணைப்பும் வாங்கி இருக்கிறேன். அதற்கான மின் கட்டண அட்டையும் என்னிடம் உள்ளது. இதை தவிர்த்த ஒவ்வொரு ஆண்டும் முறையாக 1200 கட்டணம் செலுத்தி உரிமையை புதுப்பித்து வருகிறேன்.  நேற்று காலை சென்னை மாநகராட்சி மண்டல உதவி பொறியாளர் தலைமையில் 10 பேர் வந்து எனது கடையின் மின் இணைப்பை துண்டித்தனர். இதன் பின்னர் எனது கடையை இடித்து தள்ளிவிட்டனர். இந்த கடை வைக்க வங்கியில் 70 ஆயிரம் கடன் வாங்கி உள்ளேன். இதை தவிர்த்து 30 ஆயிரம் வட்டிக்கு வாங்கி இந்த கடையை தயார் செய்தேன். இந்த கடை மூலம் தினசரி 300 வருமானம் வந்து கொண்டிருந்தது. தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னுடைய கடையை இடித்து தள்ளியுள்ளனர். இதன் மூலம் என்னுடைய 7 ஆண்டு உழைப்பு  வீணாகி விட்டது. மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை காரணமாக அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: