கிராமங்களில் 2728 மதுக்கடைகள்: பெரும்பாலும் விவசாய நிலங்கள்.. டாஸ்மாக் நிர்வாகம் ஐகோர்ட்டில் அறிக்கை

சென்னை: கிராமப் புறங்களில் செயல்படும் 2,728 டாஸ்மாக் மதுபான கடைகள் எந்த மாதிரியான நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நல்லசாமி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ராஜா ஆஜரானார்.  மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.   இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

 அதில், தமிழகத்தில் உள்ள 5198 மதுபான கடைகளில் 2728 கடைகள் கிராமப்புறங்களில் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை விவசாய நிலங்களில் செயல்பட்டு வருகின்றன. அறிக்கையை தாக்கல் செய்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க விதிகளில் தடை ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.  குறுக்கிட்ட நீதிபதிகள், விதிகள் தடுக்கவில்லை என்றால் நீதிமன்றம், மருத்துவமனை அருகிலும் மதுபான கடைகளை திறக்கலாமா? விளை நிலங்களில் கட்டிடங்களைக் கட்டி மதுபான கடைகளுக்கு வாடகைக்கு விட்டால் விவசாயம் என்னாவது? என்று கேள்வி எழுப்பினர்.  மேலும், கிராமப் புறங்களில் தற்போது அமைந்துள்ள 2728 மதுபான கடைகளும் செயல்படும் நிலங்களை வகைப்படுத்தி (நத்தம் புறம்போக்கு, தரிசு நிலம்) புகைப்பட ஆதாரங்களுடன் மார்ச் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: