×

பெங்களூரு எலகங்கா மைதானத்தில் சர்வதேச விமான கண்காட்சி துவக்கம்: இந்தியா உட்பட 31 நாடுகள் பங்கேற்பு

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை  திடலில் தொடங்கியது.  ஆசிய நாடுகளில் சிங்கப்பூர்,  அபுதாபி மற்றும் இந்தியாவில் பெங்களூருவில் மட்டுமே பிரமாண்ட விமான  கண்காட்சி நடத்தப்படுகிறது.  எலகங்காவில் உள்ள விமான பயிற்சி படைக்கு  சொந்தமான நிலத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை  விமான கண்காட்சி நடக்கிறது. இவ்வாண்டு நடைபெறுவது 12வது சர்வதேச விமான  கண்காட்சியாகும். இக்கண்காட்சி 24ம் தேதி வரை 5 நாள் நடக்கிறது.  கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. மத்திய  பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

கர்நாடக  முதல்வர் எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, மத்திய  இணையமைச்சர் சுபாஷ் பாப்ரே மற்றும் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ்,  ரஷியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கண்காட்சியில்  இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானமான சுகோய், சரங், ஏஇடப்ளிவ் அண்ட் சி, யகோட் லான்ஸ், அட்வான்ஸ்டு இலகுரக ஹெலிகாப்டர், தேஜஸ்,  நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள  சாரஸ் பிடி1 என், எம்ஐ 17, சுகோய் 30 எம்கே.ஐ, ஆண்டனோவா 132 டி, ஹாக் ஐ,  எச்டிடி 40 உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தியது.

கடந்த 10 ஆண்டுகளில்  முதல் முறையாக சூரியகிரண் விமானம் இல்லாமல் விமான கண்காட்சி நேற்று  நடந்தது. (நேற்று முன்தினம் இரு சூரியகிரண் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்து  ஏற்பட்டதால் நேற்று நடந்த துவக்க விழாவில் சூரியகிரண் இடம் பெறவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.) இந்திய போர் விமானங்களில் மூவர்ண வண்ண பொடிகளை  வானில் தூவியபடி நடத்திய சாகசங்கள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை சுண்டி  இழுத்தது. இது தவிர யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பேரிவ்  பிஇ-200,  ஸ்வீடன் நாட்டின் ஸ்கேன்டி நேவியன், இங்கிலாந்து நாட்டின்  எவோல்வேகோஸ்  உள்பட 72 விமானங்களின் சாகசம் நடந்தது. கண்காட்சியையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறையில் முதலீடு செய்யுங்கள்
விமான கண்காட்சியை  துவக்கி வைத்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘இந்த விமான கண்காட்சியில் இந்தியாவில் உள்ள 600 நிறுவனங்கள்,  வெளிநாடுகளை சேர்ந்த 400 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை  வைத்துள்ளன. நாட்டின்  பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால், இந்தியாவில்  தயாரிக்கப்படும் போர் கருவிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்களை  கொள்முதல் செய்து வருகிறோம். தற்போது வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன்  இந்தியாவில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான வாய்ப்பு 42 சதவீதம் உள்ளது. ஆகவே, நாட்டின் பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : International Airport Exhibition ,countries ,Bangalore Eranga Maidan ,India , Bengaluru, Elangana Ground, International Air Expo, India, 31 countries participating
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...