உச்ச நீதிமன்றம் அறிவிப்பு அயோத்தி நில வழக்கு பிப். 26ல் விசாரணை

புதுடெல்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை 26ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அயோத்தியில் ராமஜென்ம பூமி விவகாரத்தில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சன்னி வக்பு வாரியம், நிர்மோனி அகாரா மற்றும் ராம் லாலா ஆகிய 3 தரப்பினரும் நிலத்தை சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

சர்ச்சைக்குரிய இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விடுப்பில் சென்றதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பியதையடுத்து,  இந்த வழக்கு வரும் 26ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.  தலைமை நீதிபதி தலைமையிலான புதிய அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: