×

தேர்தல் என்பது வேறு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி ஏற்படும்: திருப்பதியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

திருப்பதி: ‘‘தேர்தல் என்பது வேறு. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதால்தான் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும்’’ என்று திருப்பதியில் நடந்த விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.171 கோடி மதிப்பிலான விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்றால் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து,  விமான போக்குவரத்து ஆகியவற்றுடன் இணைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பெறும். ஏற்கனவே ராஜமுந்திரி, விஜயவாடா விசாகப்பட்டினம் விமான நிலையங்கள் விரிவாக்கப்பட்ட நிலையில் தற்போது திருப்பதி விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 


மத்திய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து பரஸ்பரம் உறவுடன் செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் அவை தேர்தல் நேரத்தில் மட்டுமே இருக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால் மட்டுமே அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு செல்வதோடு மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சிங்கா பேசுகையில், மத்திய விமானப் போக்குவரத்தில் ஒரு லட்சம் கோடி பணிகள் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் 10 முதல் 15 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடியில் விமான போக்குவரத்தில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஓராண்டுக்கு முன்பு 25 கோடி முறை விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இரட்டிப்பாக விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனை 100 கோடி முறையாக அதிகரிக்கவே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. பல நகரங்களில் விமான நிலையங்களும்,  ஹெலிகாப்டர் இறங்கு தளமும் அமைக்கப்பட உள்ளது’’ என்றார். விழாவில் இணை கலெக்டர் கிரிஷா, ஜில்லா பரிஷத் தலைவர் கீரவாணி, எம்எல்சி சீனிவாஸ், திருப்பதி எம்எல்ஏ சுகுணா, சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி, விமான நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ரேணிகுண்டா ரயில் நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து சிறப்பு ரயில் மூலம் நெல்லூர் புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பதி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Voting ,Venkaiah Naidu ,governments ,Central ,State , Election, Central, State Governments, Development, Tirupathi, Vice President Venkaiah Naidu
× RELATED 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு