கொடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய சயான், மனோஜை 25ம் தேதி வரை கைது செய்ய தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோரை வரும் 25ம் தேதி வரை போலீசார் கைது செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் காவலாளியை கொலை செய்து, அங்கு கொள்ளையடித்தாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர். பின்னர், இவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்த நிலையில், இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று இணையதளம் ஒன்றில் பேட்டியளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ஊட்டி நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்படி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். 

இந்தநிலையில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை மீறி சயான், மனோஜ் ஆகியோர் செயல்பட்டனர். முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆவணப்படங்ளுக்கு பேட்டி அளித்துள்ளனர்’ என்றார். மேலும் அவர், ‘ஒரு வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருக்கும்போது அதில் கைதான இருவரும் அதுகுறித்து பொதுவெளியில் பேசுவது என்பது நீதித்துறையின் அதிகாரத்தில்  குறுக்கீடு செய்வது போலாகும். அவர்கள் இருவரும் சாட்சிகளை மிரட்டியதாகவும், ஆதாரங்களை கலைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது என்பதால் தான் அவர்களது ஜாமீனை ஊட்டி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘ இந்த மனு தொடர்பாக வருகிற 25ம் தேதிக்குள் போலீசார் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை சயான், மனோஜ் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடக்கூடாது’ என்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: