×

ராகுல், பிரியங்கா மோடியின் தலைமைக்கு ஈடாக மாட்டார்கள்: சிவசேனா கருத்து

மும்பை: நாட்டை வழி நடத்தி செல்வதில் பிரியங்காவும் ராகுல் காந்தியும் நரேந்திர மோடிக்கு ஈடாகமாட்டார்கள் என்று சிவசேனா கூறியுள்ளது. இதே கட்சி, சமீபத்தில் ராகுலின் பணிவை பாராட்டியும், மோடி அகங்காரம் பிடித்தவர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.மகாராஷ்டிரா மாநிலத்திலும், மத்தியிலும் பாஜ.வும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இருந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக சிவசேனா பாஜ.வையும் அக்கட்சித் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இது தொடர்பாக கட்சி பத்திரிகையான சாம்னாவில் பல தலையங்கள் எழுதப்பட்டன. மக்களவையில் பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை பாராட்டியது. மேலும், ராகுலின் பணிவு பாராட்டத்தக்கது என்றும், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோற்ற பின்னரும் பாஜ தலைவர்கள் அகங்காரம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் மறைமுகமாக மோடியை சாடியது.


 இந்த நிலையில் சிவேசனாவும் பாஜ.வும் திடீரென மீண்டும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டன. பல ஆண்டுகளாக பாஜ.வுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை செய்து வந்த சிவசேனா இப்போது பாஜ.வுடன் கூட்டணி அமைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்ளுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் பல ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவருடைய ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சிவசேனா, பாஜ.வுடன் கூட்டணி அமைத்த 2 நாட்களில் பிரதமர் மோடியை பாராட்ட தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது இருந்ததை விடவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இப்போது எவ்வளவோ முன்னேற்றம் காணப்படுகிறது. மேலும் இப்போது பிரியங்காவும் நேரடி அரசியலில் குதித்துள்ளார்.


 இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும். ஆனால் நாட்டை தலைமை தாங்கி வழிநடத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி வல்லவர். இந்த விஷயத்தில் பிரியங்காவும் ராகுலும் நரேந்திர மோடிக்கு ஈடாக முடியாது. பாஜ.வுக்கும் சிவசேனாவுக்கும் கூட்டணி ஏற்பட்டுள்ளதை பற்றி பொதுமக்கள் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள்தான் அதிகம் கவலைப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் பூச்சிகள் போன்றவை. பாஜ-சிவசேனா கூட்டணி தேர்தலில் இந்த பூச்சிகளை நசுக்கிவிடும். இதனால்தான் எதிர்க்கட்சிகள் கவலைப்படுகின்றன. இவ்வாறு அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,Priyanka ,Modi ,Shiv Sena , Rahul, Priyanka, Modi and Shiv Sena
× RELATED தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா...