ஈரோடு சென்னிமலை அருகே பயங்கரம்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி படுகொலை

சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த எக்கட்டாம்பாளையம் கோனேரிகாடு பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்தவர் துரைசாமி (65), இவரது மனைவி துளசிமணி (60). மகன் வெங்கடேசனுடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு நொய்யல் ஆற்றின் கரையோரம் 25 ஏக்கர் நிலம் உள்ளது. துரைசாமி நாட்டு வைத்தியம் பார்ப்பவர். நேற்று மதியம் வரை இவர்கள் வீட்டில் இருந்து வெளியே வராமலும், மாடுகள் அவிழ்த்து விடப்படாமல் இருந்தது. இதையடுத்து பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுப்ரமணி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு திறந்து கிடந்த நிலையில் துரைசாமியும், துளசிமணியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதில், இறந்த தம்பதிக்கு முத்துலட்சுமி (45), சுந்தராம்பாள் (37), கோமதி (35) என 3 மகள்களும், வெங்கடேசன் (32), என்ற மகனும் உள்ளனர். முத்துலட்சுமியை வெள்ளோடு எத்திராஜ் என்பவரும், சுந்தராம்பாளை பவானியை சார்ந்த தங்கவேலு என்பவரும் திருமணம் செய்துள்ளனர்.  3வது மகள் கோமதியை பெற்றோர் எதிர்ப்பை மீறி மூத்த மருமகன் எத்திராஜ் அழைத்துச்சென்று ஈரோட்டை சார்ந்த ஜோதி என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் எத்திராஜூம், ஜோதியும் இவர்களுடன் தொடர்பின்றி இருந்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த ஆண்டு எத்திராஜ் மாமானார் வீட்டில் புகுந்து, சொத்து ஆவணங்களை எடுத்து சென்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 இந்நிலையில், நேற்று முன்தினம் 2வது மகள் சுந்தராம்பாள் துரைசாமி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். மகன் வெங்கடேசன் கேரளா பகவதியம்மன் கோயிலுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு தனியாக இருந்த துரைசாமி, துளசிமணி தம்பதியை மர்மநபர்கள் இரும்பு பைப்பால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். வீட்டில் உள்ள எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை என தெரியவந்துள்ளது.  இதனால் போலீசார் மகள்கள், மருமகன்கள் அனைவரையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என டி.எஸ்.பி. ராஜ்குமார் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: