கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் அமைச்சர் உறவினர் எனக்கூறி ரூ100 கோடி மோசடி

கோவை: அமைச்சர் உறவினர் என சொல்லி பொதுமக்களை நம்பவைத்து முல்லை குரூப்ஸ் நிறுவனம் என்ற பெயரில் நகைக்கடை திறந்து ரூ100 கோடி வரை மோசடி செய்ததாக 50க்கும் மேற்பட்டவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை டாடாபாத் 7வது வீதியில் முல்லை ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் கடந்த 2017ல் நகை கடை தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு ஈரோடு, கோவை, மேட்டூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. கோபிச்செட்டிபாளையம் கிளையை சில ஆண்டுக்கு முன் அமைச்சர் திறந்து வைத்தார். இதன் மூலம் முல்லை குரூப்ஸ் நிறுவனத்தின் அதிபர் சேலம் மேட்டூரை சேர்ந்த குறிஞ்சி நாதன் தன்னை அமைச்சரின் உறவினர் என வெளியில் காட்டிக்கொண்டார்.

நகைக்கடை துவங்கிய போது, வியாபாரத்தில் முதலீடு செய்தால் தொகைக்கு ஏற்ப 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை லாப தொகையில் பங்கு தருவதாக கூறி விளம்பரம் செய்தார். அதாவது 1 லட்சம் முதலீடு செய்தால் 2 மாதம் கழித்து 1 லட்சத்து 60 ஆயிரம் திருப்பி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் தங்கள் வசதிக்கு ஏற்ப பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் சொன்னது படி பணத்தை திருப்பி தரவில்லை. தற்போது அனைத்து இடங்களிலும் உள்ள முல்லைஜூவல்லர்ஸ் கடைகள் கடந்த சில மாதங்களாக  மூடப்பட்டுள்ளன. சுமார் ரூ100 கோடி வரை மோசடி செய்து விட்டு நிறுவன அதிபர் குறிஞ்சிநாதன் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: