அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு பாமக பெண் நிர்வாகி விலகினார்: சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் நிர்வாகி ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பாமகவில் மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வந்த ராஜேஸ்வரி பிரியா என்பவர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து விலகுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுகுறித்து, சென்னையில் நேற்று ராஜேஸ்வரி பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:பாமக மீது குறைகளை சொல்வதற்காக நான் அந்த கட்சியில் இருந்து விலகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து விலகியுள்ளேன்.

இன்றைக்கு கூட்டணியும், அரசியலும் எப்படி இருக்கிறது என்றால் ஓட்டுக்கான அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அவர்கள் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலன் அரசியல் இன்று இல்லை. சிங்கப்பூரில் 8 ஆண்டுகள் இருந்து விட்டு தமிழகம் வந்தேன். நல்ல படித்த தலைவர், பாமகவில் நல்ல கொள்கைகள், திட்டங்கள் இருக்கிறது என்று நம்பி நான் பாமகவில் சேர்ந்தேன். அந்த கட்சியை எவ்வளவோ பெரிய இடத்துக்கு கொண்டு செல்வதற்கு என்னால் முடிந்த அளவுக்கு நான் உயிரை பணயம் வைத்துகூட பேசியிருக்கேன். நான் எதைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை. தமிழகத்தில் எல்லா இடத்திலும் லஞ்சம் இருக்கிறது. ஊழல் இருக்கிறது. வீதிக்கு வீதி டாஸ்மாக் உள்ளது. இதுபோன்ற வருத்தங்கள் எனக்கு இருந்ததால்தான் நான் அரசியல் கட்சிக்கு வந்தேன். எனது சொந்த செலவில்தான் இந்த கட்சிக்காக உழைத்திருக்கிறேன்.

ஜல்லிக்கட்டில் எப்படி ஒற்றுமையாக இருந்து இளைஞர்கள் வெற்றி பெற்றார்களோ அதேமாதிரி தமிழக அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தேன். அதே பாதையில்தான் பாமக சென்று கொண்டிருந்தது. நான் மிகப் பெரிய ஒரு நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், கூட்டணி குறித்து இதுபோன்ற முடிவை எடுக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். பொறுமையாக இருந்தேன். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டதோ இனிமேல் பொறுமையாக இருக்க முடியாது என்பதால் பாமகவில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: